குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின் கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விபரம் வெளியிடப்படும்: அருண் ஜெட்லி

புதுடில்லி: கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விபரங்களை வெளியிட முடியாது எனவும், அவ்வாறு வெளியிட்டால் விசாரணை பாதிக்கும் எனவும், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கறுப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்த விபரம் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் ஏராளமான கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என பல வருடங்களாக கோரிககை விடப்பட்டு வந்தது. இது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்ததும், கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மறுப்பு: இந்நிலையில் கறுப்பு பணம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய விளக்கம் ஒன்றை அளித்தது. அதில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு நாடுகளுடன் செய்து கொண்ட இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் காரணமாக,கறுப்பு பணம் குறித்த தகவல்களை வெளியிட இயலாது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கறுப்பு பண முதலீட்டாளர்களை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது என கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்-காங்.,: மத்திய அரசின் செயல் குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், கறுப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அல்லது, இதற்காக கடந்த காலங்களில் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த அரசு செய்ததை, தற்போதைய அரசு செய்யவில்லை. மத்திய அரசு நாட்டு மக்களுக்கு அளித்திருந்த வாக்கிலிருந்து பின்வாங்குகிறது என கூறினார்.

அருண் ஜெட்லி விளக்கம்: இந்நிலையில் கறுப்பு பணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்தார். அப்போது அவர், கறுப்பு பணம் தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விபரம் வெளியிடப்படும். கறுப்பு பணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வரும் நபர்களை பற்றிய விபரங்களை தர சுவிட்சர்லாந்து அரசு ஒத்துக்கொண்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் தொடர்பாக தேவைப்படும் ஆவணங்களை தர சுவிஸ் அதிகாரிகள் ஒத்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 1995ம் ஆண்டு காங்கிரஸ் அரசு ஜெர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக, கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விபரத்தை மத்திய அரசால் வெளியிட முடியவில்லை. தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா மற்றும் சுவிஸ் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றன. இரு தரப்பு ஒப்பந்தங்களை நம்மால் தகர்க்க முடியாது என கூறினார். மேலும் அவர், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு முதலீட்டை விளக்கி கொள்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பாக அட்டவணை வெளியிடப்படும் என கூறினார்.

Comments