மகா., அரியானாவில் ஆட்சியமைக்க பா.ஜ.,வுக்கு வாய்ப்பு! கருத்துக்கணிப்பில் தகவல்

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் ஆட்சியமைக்க பா.ஜ.,வுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடனும், அரியானா சட்டசபையின் பதவிக்காலம் இம்மாதம் 27ம் தேதியுடனும் முடிவடைகிறது.
இதையடுத்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 15ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில், கூட்டணியில் தங்களுக்கு சிவசேனாவுக்கு இணையான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ., உறுதியாக இருந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 135 இடங்களில் போட்டியிட பா.ஜ., விரும்பியது. ஆனால் 119 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சிவசேனா தெரிவித்து விட்டதால், வேறு வழியின்றி, தனது 25 ஆண்டுகால கூட்டணியை பா.ஜ., முறித்துக் கொண்டது. இதே போல், காங்கிரஸ் கூட்டணியில், தங்களுக்கு 144 இடங்கள் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிடத் தயார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்தார். இதை ஏற்க மறுத்தால், 15 ஆண்டுகால காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தது. இதனால் முதல்வர் பதவியிலிருந்து பிருத்விராஜ் சவான் ராஜினாமா செய்தார். இதையடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் முக்கியமான அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் 4119 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 276 பேர் பெண்கள். 8.35 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அரியானா: அரியானா மாநிலத்தைப் பொறுத்தவரையில், முக்கியமான போட்டி, காங்கிரஸ், பா.ஜ., மற்றும் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தள கட்சிகளுக்கிடையே தான் நடக்கிறது. அரியானா மாநிலத்தில் இதுவரை பா.ஜ., ஆட்சியமைத்ததில்லை. இந்த நிலையை மாற்ற பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு திட்டங்களை வகுத்து பிரசாரம் செய்தார். பா.ஜ., தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார் பேச்சாளராக இருந்து பிரசாரங்களை மேற்கொண்டார். ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை தங்களுக்கு வெற்றி வாய்ப்பைத் தரும் என பா.ஜ., நம்புகிறது. லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சி அரியானாவை மிகவும் நம்பியுள்ளது. இந்திய தேசிய லோக்தள தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா, ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் இருந்தாலும், அவருக்கென அரியானாவில் ஆதரவு காணப்படுகிறது.

இன்று மாலையுடன் இரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவடைந்தது. அரியானாவில் வாக்குசாவடிகளில் நடந்த ஒரு சில சம்பவங்கள் தவிர, பொதுவாக தேர்தல் அமைதியாக நடந்தது. மகாராஷ்டிராவிலும் எந்த வன்முறையும் இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், நடத்திய கருத்துக்கணிப்பில், அரியானாவில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா முடிவு:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என அனைத்து டிவிக்களிலும் கூறியுள்ளன. இருப்பினும், பா.ஜ.,வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு 129 தொகுதிகள் வரை கிடைக்கும் என டைம்ஸ் நவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சிவசேனாவுக்கு 56 தொகுதிகள் வரையிலும், காங்கிரசுக்கு 43 தொகுதிகள் வரையிலும், தேசியவாத காங்கிரசுக்கு 36 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

ஐ.பி.என்., லைவ்: பா.ஜ.,வுக்கு அதிக 127 தொகுதிகள் வகை கிடைக்கும் ஐ.பி.என்., டிவி கூறியுள்ளது. சிவசேனாவுக்கு 77 தொகுதிகள் வரையிலும், காங்கிரசுக்கு 40 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

என்.டி.டிவி: தேர்தலுக்கு பின் என்.டி.டிவி கருத்துக்கணிப்பில், பா.ஜ.,வுக்கு 123 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் கட்சிக்கு 43 தொகுதிகள் வரையிலும், சிவசேனாவுக்கு 69 தொகுதிகள் வரையிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 35 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே: ஹெட்லைன்ஸ் டுடே தனது கருத்துக்கணிப்பில் பா,ஜ.விற்கு 117 முதல் 131 தொகுதிகளும், சிவசேனாவிற்கு 66 முதல் 76 தொகுதிகளும், காங். கட்சிக்கு 30 முதல் 40 தொகுதிகளும், தேசியவாத காங். கட்சிக்கு 24 முதல் 34 தொகுதிகளும் கிடைக்கலாம் என கூறியுள்ளது.
அரியானா:

டைம்ஸ் நவ்: டைம்ஸ் நவ் டிவியில் வெளியான கருத்துக்கணிப்பில், பா.ஜ.,வுக்கு 52 இடங்கள் வரையும், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் வரையும், இந்திய தேசிய லோக்தள் கட்சிக்கு 23 இடங்கள் வரையும், மற்றவர்கள் 5 இடங்கள் வரையும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சி.என்.என்.,: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அரியானா மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என ஐ.பி.என்., டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பா.ஜ.,வுக்கு 52 தொகுதிகள் வரையிலும், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வரையிலும், இந்திய தேசிய லோக்தள் கட்சிக்கு 23 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

Comments