இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை

புதுடில்லி: அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான, 'நியூயார்க் டைம்ஸ் இன்டர்நேஷனல்' பத்திரிகையில் வெளியான, இந்தியாவுக்கு எதிரான கார்ட்டூனுக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த வாரம், இந்த பத்திரிகையின், தலையங்கம் பகுதியில், செவ்வாய் கிரக ஆய்வு குறித்த கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.
அதில், பணக்கார, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், செவ்வாய் கிரக வீட்டினுள் இருப்பது போன்றும், இந்திய விவசாயி ஒருவர், மாட்டுடன், அந்த வீட்டின் கதவை தட்டுவது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய, மங்கள்யான் திட்டம் வெற்றியடைந்ததைக் குறிப்பிட, இந்தியாவை ஏழை நாடாகச் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டு, அவமானப்படுத்தியுள்ளதாக, ஏராளமான வாசகர்கள், தங்கள் எதிர்ப்பை, பேஸ்புக் வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இதையடுத்து, இந்த பத்திரிகையின், தலையங்கப் பகுதி பொறுப்பாசிரியர் ஆண்ட்ரூ ரொசந்தல், மன்னிப்பு கேட்டு பேஸ்புக் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட கார்ட்டூனை, சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட, ஹெங் கிம் சாங் என்பவர் வரைந்துள்ளார். எத்தனை காலம் தான், விண்வெளி ஆய்வு என்பது மேற்கத்திய, பணக்கார நாடுகளுக்கு சொந்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் வரைந்துள்ளார். இந்திய நாட்டையும், இந்திய மக்களையும் தாழ்வாக சித்தரிக்கும் எண்ணத்தில் இந்த கார்ட்டூனை அவர் வரையவில்லை. வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வரவேற்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.எனினும், கார்ட்டூனிஸ்டை காப்பாற்றும் நோக்கில் தான், இவரது பதில் உள்ளதாக, வாசகர்கள் கருதுகின்றனர்.

Comments