எஸ்.ஐ., யை கத்தியால் குத்திய ரவுடி போலீஸ் ஸ்டேஷனில் சுட்டுக் கொலை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் எஸ்.ஐ., காளிதாசை கத்தியால் குத்திய ரவுடி செய்யது முகமது,24, சுட்டுக்கொல்லப்பட்டார். காயமடைந்த எஸ்.ஐ., ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எஸ்.பி.பட்டினம் அம்ஜத் நகரைச் சேர்ந்த சிமியோன் மகன் அருள்தாஸ்.
இவர் அப்பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இங்கு எஸ்.பி.பட்டினம் சாலிகு தனது டூ வீலரை பழுது நீக்க சில நாட்களுக்கு முன் நிறுத்தினார். நேற்று மதியம் கடை முன் நின்ற டூவீலரை எஸ்.பி.பட்டினம் அல்லாபிச்சை மகன் செய்யது முகமது,24, போதையில் எடுக்க முயன்றார். அப்போது அருள்தாஸ் தடுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செய்யது முகமது, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்தாசை குத்த முயன்றார். தப்பிய அருள்தாஸ், எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அங்கு சென்ற போலீசார் செய்யது முகமதுவை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து ஸ்டேஷனில் அடைத்தனர். இது குறித்து எஸ்.ஐ., காளிதாசுக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரத்தில் இருந்த காளிதாஸ், எஸ்.பி.பட்டினம் சென்றார். செய்யது முகமதுவை ஸ்டேஷனில் வைத்து விசாரித்தார். அப்போது செய்யது முகமதுவிடமிருந்து பறிமுதல் செய்த கத்தி மேஜை மீது இருந்தது. விசாரணையின்போது போக்கு காட்டிய செய்யது முகமதுவை, ஓரிடத்தில் நின்று பதில் அளிக்குமாறு காளிதாஸ் கண்டித்தார். இதனால் ஆவேசத்துடன் செய்யது முகமது கத்தியால் எஸ்.ஐ.,யின் இடுப்பில் குத்தினார். மேஜை மீது சாய்ந்ததில் சிறு கீறலுடன் எஸ்.ஐ., உயிர் தப்பினார். எஸ்.ஐ., காளிதாஸ் ரிவால்வாரால் செய்யது முகமதுவை மூன்று 'ரவுண்ட்' சுட்டார். இதில் இடது மார்பு, கழுத்து பகுதிகளில் குண்டு பாய்ந்து அவர் பலியானார். காயமடைந்த காளிதாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டார். செய்யது முகமது உடல், ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் மறியல்: போலீசாரை கண்டித்து செய்யது முகமதுவின் உறவினர்கள் எஸ்.பி.பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. விசாரணைக்காக அங்கு சென்ற ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனனின் காரையும் மறித்தனர். எஸ்பி., சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மறியல் கை
விடப்பட்டது. கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்.பி., மயில்வாகனன் கூறுகையில், "பிரேத பரிசோதனை அறிக்கை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அனுப்பப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Comments