வரவேற்பு!!!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ., சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமின் அடிப்படையில் இன்று விடுதலையானார். மாலை 5 மணியளவில் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் கூடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோர் உள்பட 9 பேர் தனி விமானத்தில் வந்தனர்.
 
ஜாமின் வழக்கு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர், கர்நாடக ஐகோர்டில் தங்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு, நேற்று, தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி மதன் லோகுர், நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோரின் அமர்விடம் விசாரணைக்கு, பட்டியலிடப்பட்டு இருந்தது. 65வது வழக்காக பட்டியலிடப்பட்டு இருந்ததால், பிற்பகலில் தான் விசாரணை தொடங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், முதல் 64 வழக்குகளின் விசாரணையும் மளமளவென முடிந்துவிட்டதால், முற்பகல், 11:30 மணிக்கே, ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கி விட்டது. இதை பார்வையிட, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அரசியல் பிரபலங்களான கபில்சிபல், அபிஷேக்சிங்வி, மணீஷ் திவாரி, அ.தி.மு.க.,வினர் என, ஏறத்தாழ, 300 பேர் கூடியிருந்தனர்.இந்த வழக்கில், புகார் கொடுத்தவர் என்ற முறையில், சுப்ரமணியன் சாமியும் ஆஜராகி இருந்தார். ஜெயலலிதா சார்பில், பாலி நாரிமனும்; சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பில், கே.டி.எஸ்.துளசியும் வாதிட்டனர்.

வாதங்களும், கேள்விகளும்: ஜாமின் மறுத்து, கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் குறைகள் இருப்பதாக கூறி, அதில் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகள் பற்றிய மாற்று கருத்துக்களை, பாலி நாரிமன் முதலில் முன் வைத்தார். மேலும், சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருந்த பல்வேறு ஆதாரங்களை கண்டு கொள்ளவில்லை என்றும் வாதிட்டார். அதற்கு, ''ஆனால், வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டீர்கள்,'' என்று, தலைமை நீதிபதி தத்து கேள்வி எழுப்பினார். ''அளவுக்கு அதிகமான காலம் எடுத்துக் கொண்டோம்,'' என்று, நாரிமன் ஒப்புக் கொள்ளவே; தலைமை நீதிபதி தத்து, ''நாங்கள் இப்போது தண்டனையை நிறுத்தி வைத்தால், நீங்கள் மேல்முறையீடு வழக்கை முடிக்க, இன்னும், 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்கள். சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக ஐகோர்டிலும், சுப்ரீம் கோர்டிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள், இதுவரை நடந்து கொண்ட விதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டாமா. அந்த வழக்கு விசாரணை, பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்டது,'' என்று சாடினார்.

அதற்கு பதிலளித்து நாரிமன் கூறுகையில், ''இனிமேல், அதுபோல நடந்து கொள்ள மாட்டோம். இதற்காக, நான் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யக் கூட தயாராக உள்ளேன். வழக்கை தள்ளிவைக்க, ஒருமுறை கூட கேட்க மாட்டோம். இது விளையாட்டல்ல. இதற்கு முன்பும் விளையாட்டாக இருந்திருக்கலாம். உண்மையிலேயே இவ்வாறு கூறுகிறேன். என் வார்த்தைகளை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்,'' என, கூறினார்.

உபாதைகள் காரணம்: இதை தொடர்ந்து,மொழிபெயர்ப்பு உள்ளிட்ட வேலைகள் இருப்பதால், மேல்முறையீடு மனு, கர்நாடக ஐகோர்டில் இன்னும் இரண்டு மாதங்களில் தாக்கல் செய்யப்படும்.மூன்றே மாதங்களில், விசாரணையை முடித்து, தீர்ப்பளிக்க வேண்டுமென்று, கர்நாடக ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிடட்டும். அதற்காக, ஜெயலலிதா, தன் முழு ஒத்துழைப்பையும் அளிப்பார். கர்நாடக ஐகோர்ட், எந்த நேரத்தில் ஆஜராகச் சொன்னாலும், அவர் ஆஜராக தயார். இனி, காலம் தாழ்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை.மேல்முறையீடு வழக்கு விசாரணை முடியும் வரை, இந்த பெண்ணை (ஜெயலலிதா) சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் சிறை வைக்கலாம்.ஜெயலலிதாவுக்கு, 66 வயதாகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உட்பட, பல உபாதைகள் உள்ளன; நாள்தோறும், சிகிச்சை தேவைப்படுகிறது.

லட்சோப லட்சம் தொண்டர்களுடைய கட்சியின் தலைவர், ஜெயலலிதா. இந்த வழக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெயலலிதாவை குற்றவாளி என கூறி, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, நிறுத்தி வைக்கும்படியோ, அல்லது ரத்து செய்யும்படியோ, நான் கோரவில்லை. குற்றவாளி என்று வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விசாரணையும் வரவுள்ளதால், அது குறித்து எந்த வேண்டுகோளையும் வைக்க விரும்பவில்லை. அதேசமயம், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும்படி தான் முறையிடுகிறேன்.ஜாமினில் வெளிவந்தால், சென்னையை விட்டு, வேறு எங்கும் செல்லமாட்டார். வீட்டிலிருந்து கிளம்பினால், சிசிச்சை பெறுவதற்காக, மருத்துவமனைக்கு மட்டுமே செல்வார்.இவ்வாறு, நாரிமன் வாதிட்டார். தானும், இதற்கு ஒத்த கருத்துடன் இருப்பதாக, வழக்கறிஞர் துளசியும்தெரிவித்தார்.

தீர்ப்பு என்ன? அதையடுத்து, சுப்ரமணியன் சாமி, ஜாமின் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்கையில், ''மருத்துவச் சிகிச்சைக்காக, சென்னை தான் செல்ல வேண்டுமா? ஏன் டில்லி போன்ற பிற மாநிலங்களுக்கு செல்ல முடியாதோ? என் வீடு மீது தாக்குதல் நடத்துகின்றனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவை, மிக கேவலமாக, அ.தி.மு.க.,வினர், வசைபாடுகின்றனர். அவரது உருவ பொம்மையை எரித்தனர். பன்றியைப்போல, கார்ட்டூன் வெளியிட்டு, கேவலப்படுத்தினர். நீதிபதியை அவமதிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை, அ.தி.மு.க.,வினர் அரங்கேற்றிய போதும், அதை, ஜெயலலிதா, ஒரு அறிக்கை வெளியிட்டு, தடுத்திருக்க முடியும். மாறாக, துாண்டிவிடவே செய்தார். தமிழகத்தின் மொத்த அமைச்சரவையும், கர்நாடகாவில் தான் உள்ளது. அவர்களால், அழாமல் பதவியேற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த வழக்கில், அசாதாரண நிலை உள்ளது. அதனால், ஜாமின் வழங்கப்படக் கூடாது,'' என்றார்.

''தமிழகத்தில், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியின் கேலி சித்திரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ஜெயலலிதாவால் இதை தடுத்திருக்க முடியும். ஆனால், அவர் தடுக்கவில்லை.,'' என்றார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்களுக்குள்ளேயே விவாதித்த பின்:டிசம்பர் 18ம் தேதி, அனைத்து ஆவணங்களுடனான மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட வீட்டில் சிறைவைக்கும் படியான குளறுபடியான உத்தரவுகளை, நாங்கள் பிறப்பிக்க மாட்டோம். ஒன்று, ஜாமின் தருவோம் அல்லது மறுப்போம்.தொண்டர் பலம் இருப்பதால் எல்லாம், ஜாமின் கொடுக்க முடியாது.மருத்துவ சிகிச்சைக்கு தேவையான மருத்துவர்களை சிறைக்கே வரவழைத்து, சிகிச்சை கொடுக்கலாமே.

நீதிபதிகளை விமர்சிப்பது போன்ற காரியங்கள் நடக்க கூடாது.சுப்ரமணியன் சாமிக்கும், அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.அ.தி.மு.க., தொண்டர்களால், சட்டம் ஒழுங்கிற்கு துளியளவு பங்கமும் வரக்கூடாது என்று தெரிவித்தனர்.சட்டம் ஒழுங்கு குறித்து, சுப்ரமணியன் சாமி எழுப்பிய கேள்விக்கு, ''அசாதாரண நிலை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டுக்கு ஓடிப்போக முயற்சிப்பது தான். ஜெயலலிதாவுடைய கட்சிக்காரர்கள் அட்டகாசம் செய்தால், அவரால் என்ன செய்ய முடியும். அவர் தான் இதை ஏவினார் என்பதற்கு, என்ன ஆதாரம் உள்ளது,'' என்றனர்.

இதற்கு முன்பாக, நாரிமனிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்ட போது, ''இது பற்றியெல்லாம், அவர்களிடம் கூறப்படும். ஜெயலலிதா தன் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,'' என்று ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, ஜெயலலிதாவின் தண்டனையை ஒத்திவைத்து, அவருக்கு ஜாமின் வழங்கும்படி, தலைமை நீதிபதி உள்ளிட்டோர் உத்தரவிட்டனர். மேலும், தாங்கள் உத்தரவிட்டதன் படி, இந்த வழக்கின் போக்கு உள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள, டிசம்பர் 18ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கும் என்று, தெரிவித்து உள்ளனர்.

'நானும் கன்னடர் தான்': ஜெ., ஜாமினுக்கு எதிராக வாதாடியசுப்ரமணியன் சாமி, ''கன்னடர் என்று, குன்ஹாவை திட்டுவதோடு, கன்னடர் என்பதால் தான், இப்படி கடுமையான தீர்ப்பை வழங்கியதாகவும், அ.தி.மு.க.,வினர் பேசுகின்றனர்,'' என்றார். அதற்கு, ''நான் கூடத் தான் கன்னடர்; அதற்கு என்ன செய்வது. நீதிபதிகள் அனைவருமே, மனசாட்சி படி தான் நடப்பார்கள்,'' என்று, தலைமை நீதிபதி தத்து கூறினார்.

Comments