சரிதாவுக்கு எதிராக நடுவர்கள் சதி! * குத்துச்சண்டையில் சர்ச்சை

Sarita robbed of gold medal chance asian Games Boxingஇன்ச்சான்: ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில், நடுவர்களின் சதி காரணமாக, இந்திய வீராங்கனை சரிதா தேவியின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது. வெறும் வெண்கலத்துடன் ஆறுதல் அடைந்தார்.
தென் கொரியாவின் இன்ச்சானில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்கள் குத்துச்சண்டை (60 கி.கி.,) பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்கை சந்தித்தார்.
இதன் முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் சமபலத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்த இரு சுற்றிலும் சரிதாவின் கையே ஓங்கி இருந்தது. இவர் சரமாரியாக குத்துவிட, ஜினாவின் மூக்கில் ரத்தம் கொட்டியது. இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்திய சரிதா வெல்வார் என்ற நிலையில், ஜினா 3–0 என வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்து அதிர்ச்சி தந்தனர். 

‘அப்பீல்’ நிராகரிப்பு:
இந்த முடிவை எதிர்த்து ரூ. 30 ஆயிரம் செலுத்தி இந்தியா சார்பில் ‘அப்பீல்’ செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச குத்துச்சண்டை சங்க விதிமுறைப்படி களத்தில் இருக்கும் ‘ரெப்ரிக்களின்’ முடிவை மட்டுமே எதிர்க்க முடியும்.
களத்துக்கு வெளியே அமர்ந்து புள்ளிகள் வழங்கும் நடுவர்களுக்கு எதிராக ‘அப்பீல்’ செய்ய முடியாது. இதையடுத்து இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

கண்ணீருடன் சரிதா:
கடைசியில் பைனல் வாய்ப்பை அநியாயமாக இழந்த சரிதா, வெண்கலப்பதக்கத்துடன் கண்ணீர்மல்க விடைபெற்றார்.

அநீதி இழைக்கப்பட்டது 
குத்துச்சண்டை கோதாவில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய சரிதா தேவி கூறுகையில்,‘‘எனது குழந்தையை பிரிந்து பயிற்சி மேற்கொண்டேன். இந்த கடின உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது. எனக்கு நடந்த அநீதியைப்போல, வேறு யாருக்கும் ஆசிய விளையாட்டில் நடக்கக்கூடாது. ஜினாவுக்கு தான் வெற்றி என ஏற்கனவே முடிவு செய்த நிலையில், எதற்காக போட்டியை நடத்த வேண்டும். நடுவர்களின் முடிவு மிகுந்த கவலை அளிக்கிறது,’’ என்றார். 


கணவர் ஆவேசம்
சரிதாவின் கணவரும் முன்னாள் கால்பந்து வீரருமான தொய்பா சிங் கடுமையாக ஆத்திரப்பட்டார். தங்கப்பதக்க வாய்ப்பை தென் கொரியா ‘திருடி’ விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டி நடக்கும் இடத்தில் சென்று கூச்சலிட்டார். குத்துச்சண்டையை ‘கொலை’ செய்துவிட்டனர் எனவும் ஆவேசத்துடன் கூறினார்.

பணத்தால் மாறிய முடிவு
பயிற்சியாளர் பெர்னாண்டஸ் கூறுகையில்,‘‘சரிதா தேவி சிறப்பாக செயல்பட்டார். இவர் தான் வெற்றியாளர். ஆனால், பணத்தால் முடிவு மாறிவிட்டதாக கருதுகிறேன். கடந்த 1988ல் சியோல் ஒலிம்பிக்கில் இது போன்று தான் நடந்தது,’’ என்றார்.

அதிர்ச்சியில் மேரிகோம்
இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் மேரிகோம் கூறுகையில்,‘‘சரிதா தான் உண்மையான வெற்றியாளர். ஜினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது,’’ என்றார். 

வெள்ளி வென்றார் விகாஷ் கவுடா
இதன் ஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் பங்கேற்ற இந்தியாவின் விகாஷ் கவுடா அதிகபட்சமாக 62.58 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். கிளாஸ்கோ (2014) காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றிருந்த விகாஸ் கவுடாவுக்கு, ஈரான் அணியின் எசான் ஹதாதி மீண்டும் கடும் நெருக்கடி தந்தார். இதில் பதக்கம் வென்றதன் மூலம் ஹதாதி ஆசிய விளையாட்டில் (2006,10,14) ‘ஹாட்ரிக்’ தங்கத்தை கைப்பற்றினார். வெண்கலப்பதக்கத்தை கத்தாரின் முகமது வென்றனர். 

பைனலில் மேரி கோம்
குத்துச்சண்டை அரையிறுதியில் (51 கி.கி.,) இந்தியாவின் மேரிகோம், வியட்நாமின் லி தி பாங்கை எதிர் கொண்டார். இதில் அசத்தலான திறமையை வெளிப்படுத்திய மேரிகோம் 3–0 என பைனலுக்குள் நுழைந்தார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம், கடந்த ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். 

பூஜாவுக்கு வெண்கலம்
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் (69–75 கி.கி.,) பூஜா ராணி 0–2 என சீனாவின் லி குயினிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.

பாய்மரப்படகு: இந்தியாவுக்கு வெண்கலம் 
பாய்மரப்படகு இரண்டு நபர்களுக்கான போட்டியில் இந்தியாவின் வர்ஷா, ஐஸ்வர்யா ஜோடி 25 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் பாய்மரப்படகு போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஜோடி என்ற பெருமை பெற்றது. இன்ச்சானில் நடக்கும் விளையாட்டில், இந்தியா சார்பில் பங்கேற்கும் நட்சத்திரங்களில் வர்ஷா(16) தான் குறைந்த வயதுடையவர். 
இது குறித்து இந்திய அணி மானேஜர் கே.டி.சிங் கூறுகையில்,‘‘ வர்ஷாவுக்கு 16 வயதுதான் ஆகிறது. ஆசிய விளையாட்டு பாய்மரப்படகு போட்டியில் முதல் பதக்கம் வென்றது மகிழ்ச்சி தருகிறது,’’ என்றார். 

கபடி: இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,
ஆண்கள் கபடியில் அசத்திய இந்திய அணி, பாகிஸ்தானை 23–11 என வீழ்த்தியது. இதன் மூலம் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. 
* கபடி போட்டியின் பெண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று, தென் கொரியாவை 45–26 என வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டு வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்ற இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

வாலிபால்: இந்தியா தோல்வி
பெண்கள் அணிக்கான 5–8வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி 0–3 என தோல்வியடைந்தது. 

டேபிள் டென்னிஸ்: இந்தியா அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சரத் கமல், அமல்ராஜ் அடங்கிய இந்திய அணி 6–11, 11–5, 11–8, 12–10 என நேபாள அணியை வீழ்த்தியது. 
* மற்றொரு போட்டியில் சவுமியாஜித், ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி 12–10, 11–5, 11–6 என ஏமன் அணியை தோற்கடித்தது. 

அரையிறுதியில் சதீஸ் குமார்
ஆண்கள் குத்துச்சண்டை (91 கி.கி.,) பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஸ் குமார் 2–1 என ஜோர்டானின் ஹசைனை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். 
* மற்றொரு காலிறுதியில் (75 கி.கி.,) இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் 3–0 என உஸ்பெகிஸ்தானின் நார்மாட்டோவாவை வீழ்த்தினார். 

சிவா தபா தோல்வி
ஆண்கள் குத்துச்சண்டை (56 கி.கி.,) பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிவா தபா 0–3 என பிலிப்பைன்சின் மரியோ பெர்னான்டசிடம் வீழ்ந்தார். 

தேவேந்திரோ ஏமாற்றம்
ஆண்கள் குத்துச்சண்டை (46–49 கி.கி.,) பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் தேவேந்திரோ சிங் தென் கொரியாவின் ஜான்கனை எதிர் கொண்டார். இதில் தேவேந்திரோ சிங் சிறப்பாக செயல்பட்டபோதும், நடுவர்களின் தவறான தீர்ப்பால் ஜான்கன் 3–0 என வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

அஷ்வினி அசத்தல்:
பெண்கள் 400 மீ., தடை தாண்டுதல் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் அக்குன்ஜி அஷ்வினி 57.67 வினாடிகளில் இலக்கை அடைந்து பைனலுக்கு முன்னேறினார். 

ஜித்தன் முன்னேற்றம்
ஆண்கள் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர் ஜித்தன் பால் இலக்கை 51.76 வினாடிகளில் அடைந்து பைனலுக்கு முன்னேறினார். 
* மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ஆபிரகாம் 51.04 வினாடிகளில் இலக்கை அடைந்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 

டிண்டு அபாரம்:
பெண்கள் 800 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் கலந்து கொண்ட இந்தியாவின் டிண்டு லுாக்கா 2.04.28 நிமிடத்தில் இலக்கை அடைந்து பைனலுக்கு முன்னேறினார். 
* மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுஷ்மா தேவி 2.03.54 வினாடிகளில் இலக்கை அடைந்து பைனலுக்குள் நுழைந்தார். 

ஆஷா ஏமாற்றம்:
பெண்கள் 200 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஆஷா ராய் 23.96 வினாடிகளில் இலக்கை அடைந்து ஏமாற்றினார்.

Comments