கடந்த 2011ல், அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனால் துவக்கப்பட்ட, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பில், சில காலம் இருந்த, அபுபக்கர் அல் - பாக்தாதி என்பவன், ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறான்.ஈராக் மற்றும் சிரியாவில் பல இடங்களை கைப்பற்றி, அவற்றை இஸ்லாமிய பிரதேசமாக அறிவித்து, 'உலக இஸ்லாமியர்களின் உயரிய தலைவன்' என, பிரகடனம் செய்துள்ளான். அவன் தலைமையிலான குழுவின் பயங்கரவாத செயல்களால் ஈர்க்கப்பட்ட சில பயங்கரவாத குழுக்கள், அவனுடன் சேர்ந்து வருகின்றன.அந்த வகையில், பாகிஸ்தானில் செயல்படும், டி.டி.பி., என்ற தலிபான் பயங்கரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அந்த பயங்கரவாதிகளின் தலைவன், முல்லா பஸ்லுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நம் சகோதரர்கள் போன்றவர்கள். அவர்களின் வெற்றி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் துக்கம் மற்றும் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க வேண்டும். இப்போது அந்த அமைப்பிற்கு சற்று சங்கடமான நேரம். இந்த நேரத்தில் அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்களின் அனைத்து விதமான ஆதரவும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சுக்கு உண்டு.இவ்வாறு அவன் தெரிவித்துள்ளான்.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவர்களின் பண பலமும், ஆள் பலமும் வெகுவாகக் குறைந்து விட்டன.
மேலும், பூகோள ரீதியில் பாகிஸ்தானுக்கும், சிரியாவுக்கும் நீண்ட தூரம் என்பதால், தொழில்நுட்ப வசதிகள் அறவே தெரியாத தலிபான் பயங்கரவாதிகளால், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எந்த விதத்திலும் ஆதரவு அளிக்க முடியாது என, பயங்கரவாதிகள் ஒழிப்பு படையில் உள்ள வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, மலேசியாவைச் சேர்ந்த, 26 வயது பெண் டாக்டர் உட்பட 22 மலேசியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக, மலேசிய போலீசார் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.ஈராக்கின் அண்டை நாடான ஈரானின் அணு சக்தி அமைப்புகளை கைப்பற்ற, தன் குழுவினருக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதி உத்தரவிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஈரான் அணு சக்தி அமைப்புகளை கைப்பற்றி, பேரழிவு ஆயுதங்களை தயாரித்து, அவற்றின் மூலம், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தாக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து, 'டைப்' செய்யப்பட்டு, அதில் உள்ள எழுத்துகள் தெரியாத வகையில், ஓட்டைகள் போடப்பட்ட கடிதம் ஒன்றை, ஈராக் ராணுவத்தினர் சமீபத்தில் கைப்பற்றியுள்ளனர். அதில், மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.பயங்கரவாதிகளின் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர்களின் சதித் திட்டம், உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அனேக நகரங்களை கைப்பற்றியுள்ள இந்த பயங்கரவாதிகள், தங்களின் அடுத்த இலக்காக, ஈரான் அணு சக்தி நிலையங்களை கைப்பற்றுவதை கொண்டுள்ளனர் என்ற செய்தி, மேலை நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஹாதி ஜானை அழிக்க உத்தரவு:பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ஆலன் ஹென்னிங்கை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கழுத்தை அறுத்து படுகொலை செய்ததை அடுத்து, கடும் கோபம் அடைந்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அந்த படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகளில் ஒருவனான, ஜிஹாதி ஜான் என்ற, பிரிட்டனைச் சேர்ந்தவனை கண்டுபிடித்து அழிக்க, தன் உளவு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.ஆலன் ஹென்னிங் மற்றும் மேலும் சிலரை இந்த பயங்கரவாதி, கழுத்தை அறுத்து கொன்றதை, வீடியோ படங்கள் மூலம் உறுதி செய்துள்ள பிரிட்டன், எப்படியாவது அவனை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என, எம்- - 15, எம் - 16 உளவு படைகளின் தலைவர்களுக்கு, பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று உத்தரவிட்டார்.
அமெரிக்காவுக்கு முதல் இழப்பு:ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க விமான தாக்குதலில், முதல் அமெரிக்க வீரர் பலியாகியுள்ளார்.அமெரிக்க விமான தாக்குதலுக்கு உதவி செய்வதற்காக, பெர்சியன் வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, மேக்கின் ஐலண்ட் என்ற போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற குட்டி விமானம், கடலில் விழுந்து நொறுங்கியது.அதில் இருந்த ஒரு வீரர் காப்பாற்றப்பட்டார்; மற்றொருவரான ஜோர்டான் எல் ஸ்பியர்ஸ் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
பிரிட்டன் ஆசிரியர் திடீர் விடுவிப்பு:வட ஆப்ரிக்க, அரபு நாடான லிபியாவில், ஐந்து மாதங்களுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட, பிரிட்டன் ஆசிரியர், டேவிட் போலம் என்பவரை, பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர்.லிபியா அதிபராக இருந்த கடாபி, 2011ல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள் ஏற்படத் துவங்கின. அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பென்காஜியில், சர்வதேச பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த டேவிட் போலம் என்பவரை, ஜெய்ஷ் அல் - இஸ்லாம் என்ற பயங்கரவாதிகள் கடத்திச் சென்று, தங்கள் பிடியில் வைத்திருந்தனர்.இந்நிலையில், டேவிட் போலமை, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் விடுவித்தனர். பயங்கரவாதிகள் கேட்டபடி, பிணைத்தொகை கொடுத்து அவர் மீட்கப்பட்டாரா அல்லது பயங்கரவாதிகள் தாங்களாக முன்வந்து அவரை விடுவித்தனரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.மேற்காசிய நாடான சிரியாவில், பிரிட்டன் நபர் ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட தகவல் நேற்று முன்தினம் வெளியான நிலையில், ஜெய்ஷ் அல் இஸ்லாம் பயங்கரவாதிகள், பிரிட்டன் ஆசிரியரை விடுவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments