ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் பெங்களூரிலேயே காத்திருக்கும் முதல்வர் பன்னீர்செல்வம்!

ஜாமீன் கிடைக்காத விரக்தியிலுள்ள ஜெயலலிதா, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களை சந்திக்காமல் இழுத்தடித்து வருவதால் அவர்கள் பெங்களூரிலேயே காத்திருப்பதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஓ. பன்னீர் செல்வம். அமைச்சரவையில் மொத்தம் 30பேர் பதவியேற்றுள்ளனர். பதவியேற்புக்கு பிறகு, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூர் புறப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் வைத்தியலிங்கம் ஆகியோரும் புறப்பட்டனர். பெங்களூர் வந்தடைந்த அவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இன்று காலை அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹைகோர்ட்டில் ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால், ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி விடுவார். விடுதலை செய்தியுடன் அவரை சந்திக்கலாம் என காத்திருந்தனர். ஆனால், ஜாமீன் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போடப்பட்டதால் ஜெயலலிதாவை சந்திக்க தயங்கி ஹோட்டலிலேயே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் இருந்தனர். இந்நிலையில் நாளை மீண்டும் ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வருவதால் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் குஷியடைந்துள்ளனர். இதையடுத்து சிறைக்கு சென்று ஜெயலலிதாவை பார்க்க திட்டமிட்டனர். ஆனால் இன்று மாலை வரை அவர்களை சந்திக்க ஜெயலலிதா அனுமதி தரவில்லை. எனவே பெங்களூரிலேயே காத்திருக்கின்றனர். ஜெயலலிதா அனுமதி மறுத்தது குறித்து சில டிவிட்டுகளும் வலம் வருகின்றன. நாளை ஜாமீன் மனு மீதான விசாரணையில் எந்த மாதிரி தீர்ப்பு வருகிறதோ அதைப் பொறுத்தே, பன்னீர்செல்வம் குழு, ஜெயலலிதாவை சந்திக்குமா, தமிழகம் திரும்புமா என்பது தெரியவரும்.

Comments