ராமேஸ்வரத்தில் இருந்து, 2011 நவ., 28ல், தங்கச்சிமடம் மீனவர்கள், வில்சன், 40, எமர்சன், 38, அகஸ்டஸ், 39, பிரசாத், 35, லாங்லெட், 19 ஆகியோர், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மீனவர்கள், பல போராட்டங்களை நடத்தினர். இந்த வழக்கை, சட்ட ரீதியாக சந்தித்து முடிக்க, நிரபராதிகள் மீனவர் விடுதலை கூட்டமைப்பு நிர்வாகி அருளானந்தத்திடம், தமிழக அரசு, 2 லட்சம் ரூபாய் வழங்கியது. அதன்பின், இந்த வழக்கு விசாரணை, கொழும்பு நான்காவது மேல் கோர்ட்க்கு (ஐகோர்ட்) மாற்றப்பட்டது.ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில், இலங்கை வக்கீல் அனில் சிங்கே ஆஜரானார். யாழ்ப்பாணம் சிறையில், 1,000 நாட்களுக்கு மேலாக வாடிய ஐந்து மீனவர்களும், பின்னர் கொழும்பு வெளிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டனர்.
மத்தியில், பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும், இலங்கை சிறையில் உள்ள
தமிழக மீனவர்களை விடுவிப்பதாக, இலங்கை அதிபர் ராஜபக் ஷே அறிவித்தார்.
இதனால், தங்கச்சிமடம் மீனவர்கள், ஐந்து பேரும் விடுதலையாவர் என, அவர்களது
உறவினர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை
முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐந்து மீனவர்களுக்கும் துாக்கு
தண்டனை விதித்து, கொழும்பு ஐகோர்ட் நீதிபதி சுரனே தீர்ப்பளித்தார்.
ரயில் தண்டவாளம் தகர்ப்பு, தீ வைப்பு : தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் அங்கு மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மறியலால், இரு புறமும் போக்குவரத்து பாதித்து ஏராளமான பஸ்கள் நின்றன.
ராமேஸ்வரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரால் மறியலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் சமரசம் பேசியும் பயனில்லை. மறியலில் ஈடுபட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆவேசமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் தங்கச்சிமடம் பழைய ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்குச் சென்றனர்.
அங்கிருந்த ரயில்வே ஊழியர்களின் உைடமைகளை அடித்து நொறுக்கினர். பின்னர், 100 மீட்டர் துாரத்திற்கு தண்டவாளத்தை தகர்த்தெறிந்தனர். தண்டவாளத்தை இணைத்து பிடிக்கும் ஊக்குகளை அகற்றி எறிந்து விட்டு தண்டவாளத்திற்கு தீவைத்தினர். இதனால் ரயில் போக்குவரத்து பாதித்தது.பாம்பன் பாலத்தில் மறியல்: மாலை 4 மணிக்கு தங்கச்சிமடத்தில் சாலை மறியல் போராட்டம் துவங்கியது.
இத்தகவல் மேலும் பரவியதால், பாம்பன் ரோடு பாலத்தில் நேற்று மாலை 5:30 மணிக்கு மீனவ பெண்கள் உட்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்கள் மண்டபத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டன. இதனால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
4 ரயில்கள் ரத்து, டவுன் பஸ் எரிப்பு: --தங்கச்சிமடத்தில் தண்டவாளத்தை பெயர்த்ததால், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.மாலை 5 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ், 5:40 க்கு புறப்படும் மதுரை பாசஞ்சர், இரவு 8 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ், இரவு 8:40 க்கு புறப்படும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பெங்களூருவில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை 5:20 மணிக்கு தங்கச்சிமடம் வந்த அரசு விரைவு பஸ் கண்ணாடிகளை சிலர் அடித்து நொறுக்கினர். இதில் டிரைவர் சுரேஷ் லேசான காயமடைந்தார். ராமேஸ்வரம் செல்ல அக்காள்மடம் பஸ் ஸ்டாப்பில் நின்ற அரசு டவுன் பஸ்சுக்கு சிலர் தீ வைத்தனர். பஸ் முழுவதும் எரிந்து விட்டது.
மாணவ, மாணவிகள் அவதி: பாம்பன், தங்கச்சி மடம் பகுதிகளில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைபட்டது. இதனால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பள்ளிகளில் பயிலும் பிற பகுதி மாணவ, மாணவிகள் மாலையில் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை பாதுகாப்பாக பள்ளிகளில் தங்க வைக்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடுகள் செய்தது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தைகளை ஆட்டோ, டூவீலர்களில் வீடுகளுக்கு அழைத்து வந்தனர்.பிரதமர் உதவ கோரிக்கை: மீனவர் சங்கத்தலைவர் சேசு பேட்டி: மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் ஐவர் மீது போதை பொருள் கடத்தியதாக இலங்கை அரசு பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது. 35 மாதங்கள் சிறையில் இருந்த அவர்கள் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்த்தோம். துாக்கு தண்டனை தீர்ப்பால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்படும். இத்தண்டனையை ரத்து செய்ய பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் எதிரொலியாக, நேற்று மாலை 6:05 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் ரயில், மதுரை ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட வண்ணம் இருந்தனர். பின், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ௨௦ நிமிடங்கள் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றது.
தங்கச்சி மடம் அருகே ரயில் தண்டவாளம் பெயர்த்து தள்ளி வைக்கப்பட்டதையடுத்து, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்ற ரயில் மானாமதுரையில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் மதுரைக்கே திரும்பி வந்தது.
Comments