தீபாவளிக்கு மது குடித்த 3 பேர் பலி; விஷம் கலந்தாரா மனைவி: விசாரணை


தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டத்தில் மது குடித்த 3 பேர் பலியாயினர். இறந்த 3 பேருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழ அமராவதி கிராமத்தை சேர்ந்த ராமரத்தினம் (42), தேவேந்திரன் ( 45), ஆனந்த் (45) , கஜேந்திரன் (40), இவர்கள் 4 பேரும் நண்பர்கள்.
கூலித்தொழிலாளிகளான இவர்கள் தீபாவளிக்காக 2 ஆப் பிராந்தி வாங்கி வீட்டில் வைத்து 2 நாட்களாக தொடர்ந்து குடித்துள்ளனர். பழைய மீன்குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட்டுள்ளனர். 4 பேருக்கும் வாந்தி மயக்கம் வந்தது.

இதனையடுத்து 4 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ராமரத்தினம்,தேவேந்திரன் ,ஆனந்த் ஆகிய 3 பேரும் இறந்தனர். கஜேந்திரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இப்படி குடித்து சீரழிகிறார்களே ? : விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: இந்த நான்கு பேரும் பிராந்தி பாட்டல் வாங்கிய கடையில் இவர்கள் வாங்கிய கம்பெனி 120 பாட்டல் விற்றுள்ளது. வேறு யாருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த நான்கு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது ஏன் என்ற சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து ராமரத்தினம் வீட்டில் இருந்த மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நான்குபேரும் வீட்டில் வாங்கி வைத்து குடித்துள்ளனர் இப்படி குடித்து சீரழிகிறார்களே என குடியை மறப்பதற்கு மனைவி மருந்து, மாத்திரைகள் எதுவும் கலந்தாரா? அல்லது விஷம் ஏதும் கலந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பு குறித்த இறுதி முடிவுக்கு வரமுடியும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மன்னார்குடி சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர்.

Comments