காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

பழநி: ஒட்டன்சத்திரம் அருகே காளிப்பட்டி, கொங்குபட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

பழநி, ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்றுஇரவு பெய்த கனமழையால் நல்லதங்காள் ஓடை, கஞ்சநாயக்கன்பட்டி குளத்து கால்வாய் ஓடையில் இன்று அதிகாலை 5:00 மணியளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வௌ்ளம் புகுந்ததால் காளிபட்டியிலுள்ள தோட்டத்து சாலை வீடுகளில் வசித்த கருப்புசாமி, சேனாபதி, பழனிச்சாமி, முருகாத்தாள் உட்பட 15 பேரும், கொங்கு பட்டியில் வசித்த பழனிச்சாமி, நாச்சம்மாள், கருப்புசாமி, காளியம்மாள், முருகேசன், சூரியகுமார் உட்பட 10 பேரும் வீடுகளின் மேற்கூரை மீது ஏறி நின்றனர். தகவலறிந்த பழநி, ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர், அவர்களை மீட்க முயற்சித்த போதும், அதிகளவு தண்ணீர் வந்ததால் ஓடையை கடந்து செல்ல முடியவில்லை. இதனால் மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டது.

அதன்பின், பகல் 3:00 மணிக்கு சூளூரிலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி.,ஜெயச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று மீட்டு பணிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்ட கொங்குபட்டி முருகேசன் கூறுகையில், “அதிகாலையில் திடீரென வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தது. ஆடு, மாடு, உரமூடைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உயிரை காப்பாற்றிக்கொள்ள வீட்டின் கூரை மீது ஏறி நின்றோம். ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்கும் போது மிகவும் பயமாக இருந்தது. கரைக்கு வந்த பின்பு தான் நிம்மதியடைந்து உள்ளோம்,” என்றார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாச்சலம் கூறுகையில், 4
நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால் (32 செ.மீ., அளவுக்கு) ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக 25 பேர் சிக்கிக் கொண்டதாகவும், உடனடியாக இந்த தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது அறிவுறுத்தலின் பேரில், சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டதாகவும்,அனைவரும் விரைவாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Comments