கருணாநிதி - அர்னால்டு சந்திப்புக்கு தடை: பிரபல இயக்குனர் மீது தி.மு.க., அதிருப்தி

திரைப்பட பாடல் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, முதல்வர் ஜெயலலிதாவை, சந்தித்து பேசினார். அப்போது, சினிமாத் துறையில், மூத்த கதை, வசன கர்த்தாவாக விளங்கி வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியையும் சந்திக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர், இருவரையும் சந்திக்க விடாமல் தடுத்த தகவல், இப்போது வெளியாகி இருக்கிறது.
இதனால், அந்த இயக்குனர் மீது தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.

திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள, 'ஐ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, சென்னை வந்தார். கோட்டையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், 'சிடி' வெளியிடுவதற்கு முன்பாகவே, மேடையில் ஏறி பேசினார். சிறிது நேரத்திலேயே, அரங்கை விட்டும் சென்று விட்டார். இதனால், அவ்விழாவில் பங்கேற்ற நடிகர்கள் ரஜினி, விக்ரம் போன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


சந்திப்பு:

சென்னையில், அர்னால்டுவை, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சந்தித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக அர்னால்டு இருந்தபோது, இருவருக்கும் அறிமுகம் உண்டு.அந்த அடிப்படையில், அர்னால்டுவிடம், 'தமிழக சினிமாத் துறையின் மூத்த கதை, திரைக்கதை, வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என, பன்முகம் கொண்டவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரை நீங்கள் சந்தித்துப் பேச வேண்டும்' என, அழைப்பு விடுத்துள்ளார்.அர்னால்டும், கருணாநிதியை சந்திக்க, ஆர்வமாக இருந்துள்ளார்.ஆனால், இந்த தகவல், பிரபல இயக்குனர் ஒருவருக்கு தெரிய வந்ததும், அவர் சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் மூலமாக காய்களை நகர்த்தி, அர்னால்டு கருணாநிதி சந்திப்பு நடக்க விடாமல் தடுத்து விட்டார் என, கூறப்படுகிறது.கருணாநிதியை அர்னால்டு சந்தித்துப் பேசினால், தான் இயக்கும் பிரமாண்ட படம், தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கலாகும் என பயந்தே, இருவர் சந்திப்புக்கும் சாதுர்யமாக தடை போட்டு விட்டார், அந்த பிரமாண்ட இயக்குநர். இதனால், அவர் மீது தி.மு.க.,வினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், கட்சி வட்டாரங்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.

Comments