வரலாறு படைத்தார் தீபிகா: ஸ்குவாஷில் வெண்கலம் வென்றார்

இன்ச்சான்: ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் தனிநபர்  போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் தீபிகா பல்லீகல். துப்பாக்கிசுடுதலில் இந்திய பெண்கள் அணி வெண்கலம் பெற்றது.                         

தென் கொரியாவின் இன்ச்சான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது.
நேற்று நடந்த பெண்கள் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லீகல், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான மலேசியாவின் நிக்கோல் டேவிட் மோதினர்.                      

முதல் இரு செட்களை 4–11, 4–11 என, இழந்த தீபிகா, மூன்றாவது செட்டிலும் 5–11 என, கோட்டை விட்டார். மொத்தம் 25 நிமிடங்கள் மட்டும் நடந்த போட்டி முடிவில், தீபிகா பல்லீகல் 0–3 (4–11, 4–11, 5–11) என்ற கணக்கில் வீழ்ந்தார். இருப்பினும், அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் அடிப்படையில் தீபிகா பல்லீகலுக்கு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, ஆசிய விளையாட்டு தனிநபர் ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். 

ரூ. 20 லட்சம் பரிசு                  

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலம் கைப்பற்றிய தமிழக வீரங்கனை தீபிகா பல்லீகலுக்கு, அரசு ரூ. 20 லட்சம் பரிசு அறிவித்தது.                  

ஸ்குவாஷ் சங்கத்தின் மீது பாய்ச்சல்            

வெற்றி குறித்து தீபிகா பல்லீகல் ஆவேசமாக கூறியது: ஜோஷ்னாவை நேருக்கு நேர் சந்திக்க விருப்பம் இல்லாததால் தான், தொடர் அட்டவணையை குறை சொன்னதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இப்போது கிடைத்த வெற்றி எனக்கு முக்கியமானது.             

ஏனெனில், அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபித்துள்ளேன். இருப்பினும், ஜோஷ்னா அடுத்த பிரிவில் இடம் பெற்றிருந்தால், இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்திருக்கும்.            

இதுகுறித்து இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பிடம் (எஸ்.ஆர்.எப்.ஐ.,) தெரிவித்த போது, பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. எஸ்.ஆர்.எப்.ஐ., எப்போதும் இப்படித்தான் நடந்து கொள்ளும். இதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனது 14வயதில் இருந்து இப்படித் தான் பிரச்னையை சந்தித்து வருகிறேன்.             

இன்று இந்தளவுக்கு கிடைத்த வெற்றி அனைத்தும் எனது சொந்த முயற்சி தான். இந்திய சீருடை அணிந்து, தேசத்துக்காக விளையாடுவதைத் தவிர, வேறெதுவும் எனக்கு முக்கியம் இல்லை. இதனால் தான் இங்கு பங்கேற்க வந்தேன்.  இவ்வாறு தீபிகா பல்லீகல் கூறினார்.

சவுரவ் கோஷால் சாதனை                       

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், இந்திய வீரர் சவுரவ் கோஷால், மலேசியாவின் பெங் ஹீயை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 11–9 என, கைப்பற்றிய கோஷால், அடுத்த இரு செட்களையும் 11–4, 11–5 என்ற கணக்கில் கைப்பற்றினார். முடிவில், 3–0 (11–9, 11–4, 11–5) என, வென்ற கோஷால், ஆசிய விளையாட்டு பைனலுக்கு முன்னேறிய, முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.                         
* ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் 2010ல்  சவுரவ் கோஷால் (தனிநபர்), இந்திய ஆண்கள், பெண்கள் அணி மற்றும் 2014ல் தீபிகா பல்லீகல் என, இதுவரை 4 வெண்கலம் தான் கிடைத்தது. சவுரவ் கோஷால் பைனலுக்கு முன்னேறியதால், முதன் முறையாக இப்போட்டியில் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.                         
இன்று நடக்கும் பைனலில் குவைத்தின் அப்துல்லாவை சந்திக்கிறார்.

வுஷூவில் அசத்தல்                  

வுஷூ பெண்கள் 52 கி.கி., சாண்டா பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சனதோய் தேவி, மங்கோலியாவின் சாங்கிடோர்சை 2–0 என்ற கணக்கில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.      
* ஆண்களுக்கான 60 கி.கி., சாண்டா பிரிவு காலிறுதியில், இந்தியாவின் நரேந்தர் கிரிவால் 2–0 என பாகிஸ்தானின் அப்துல்லாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் வுஷூவில் குறைந்தபட்சம் இரண்டு வெண்கலம் உறுதியானது.      

ஹாக்கி: பெண்கள் அபாரம்                  

நேற்று நடந்த பெண்கள் ஹாக்கி ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இந்திய அணி, தாய்லாந்தை 3–0 என, வீழ்த்தியது. இந்தியா சார்பில் பூனம் ராணி (15வது நிமிடம்), வந்தனா (39வது), தீபிகா (53வது) தலா ஒரு கோல் அடித்தனர். அடுத்த லீக் போட்டியில் இந்திய அணி நாளை சீனாவை எதிர்கொள்கிறது.                  

கூடைப்பந்தில் இரண்டாவது வெற்றி                              

ஆண்கள் கூடைப்பந்து ‘பி’ பிரிவு தகுதிச்சுற்றில், இந்திய அணி கஜகஸ்தானை, 80–61 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதையடுத்து, முதல்கட்ட போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, ‘இ’ பிரிவில் ஈரான், பிலிப்பைன்ஸ் அணிகளுடன் இடம் பெற்றது. இன்று, இந்தியா–பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது தோல்வி                        

பெண்கள் வாலிபால் போட்டியில் முதல் போட்டியில் தென் கொரியாவிடம் தோற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஜப்பானை சந்தித்தது. இதில் துவக்கத்தில் இருந்தே எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ‘சரண்’ அடைந்தனர் இந்திய பெண்கள். முடிவில், 6–25, 11–25, 12–25 என்ற நேர்செட்களில் மோசமாக வீழ்ந்தனர்.                                                             

படகுவலித்தில் ஏமாற்றம்                        

இலகுரக படகுவலித்தல் போட்டியில் வர்கீஸ், மோனலிஷா, ககோபா தேவி, மஞ்சுளா அடங்கிய இந்திய அணி, 2000 மீ., துரத்தை 7:05.65 நிமிடத்தில் கடந்து கடைசி இடம் (5வது) பெற்று வெளியேறியது.                               

நீச்சலில் சொதப்பல்                        

ஆண்கள் 50 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ நீச்சல் போட்டியில், இந்திய வீரர் பிரதாபன் நாயர் பங்கேற்றார். பந்தய துாரத்தை 26.85 வினாடிகளில் கடந்த இவர், தகுதிச்சுற்றில் 6வது (மொத்தம் 7 பேர்) இடம் பெற்று ஏமாற்றினார்.                                           
ஜூடோவில் ‘அவுட்’                                                

பெண்கள் ஜூடோ +78 கி.கி., காலிறுதியில் இந்திய வீராங்கனை ராஜ்விந்தர் கவுர், மங்கோலியாவின் ஜாவ்ஸ்மாவிடம் வீழ்ந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, ஜூடோ போட்டிகளில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில், 6 பதக்கம் வென்ற நிலையில், ஆசிய விளையாட்டில் வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.                              

திரும்புகிறது கால்பந்து அணி                        

ஆசிய விளையாட்டு கால்பந்தில் கடின பிரிவில் இடம் பெற்றதால், இந்திய அணிகளுக்கு பெரும் சர்ச்சைக்கு இடையில் தான் அனுமதி கிடைத்தது. இதற்கேற்ப, முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சிடம் தோற்ற இந்தியா, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், ஜோர்டானை சந்தித்தது. இதில் 0–2 என, தோற்ற இந்திய ஆண்கள் அணி, வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.                         
டென்னிசில் அடுத்தடுத்து தோல்வி                                          

பெண்கள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதன் முதல் இரண்டு ஒற்றையர் போட்டிகளில் இந்தியாவின் பிரார்த்தனா (6–3, 6–2, எதிர்–நடாலியா), அன்கிதா ரெய்னா (7–5, 7–6, எதிர்–ஷிவ்தோவா) வீழ்ந்தனர்.                                           
பெண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரிஷிகா, நடாஷா மேரி ஆன் ஜோடி முதல் செட்டில் 3–2 என, முன்னிலையில் இருந்தது. அப்போது, போட்டியில் கஜகஸ்தான் விலகிக் கொள்ள, இந்தியா வென்றாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்திய பெண்கள் அணி, 1–2 என்ற கணக்கில் வீழ்ந்தது.                                           

ஆண்கள் ‘அவுட்’                                          

ஆண்கள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய ஆண்கள் அணி, கஜகஸ்தானை சந்தித்தது. இதன் முதல் இரு ஒற்றையர் போட்டிகளில் இந்தியாவின் சனம் சிங் (6–7, 6–7, எதிர்–அலெக்சாண்டர்). யூகி பாம்ப்ரி (2–6, 8–6, 1–6, எதிர்–மிகைல்) தோல்வியடைந்தனர்.                                  இரட்டையர் போட்டியில் சாகேத் மைனேனி, திவிஜ் சரண் ஜோடி (7–5, 7–5) வென்ற போதும், 1–2 என்ற கணக்கில் வீழ்ந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

ஹாக்கி: இந்தியா–ஓமன் மோதல்            

ஆண்களுக்கான ஹாக்கி 2வது லீக் போட்டியில் இன்று இந்திய அணி, ஓமனை சந்திக்கிறது. முதல் லீக் போட்டியில், இந்திய அணி 8–0 என இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த ருபிந்தர்பால் சிங், இரண்டு கோல் அடித்த ராமன்தீப் சிங் உள்ளிட்டோர் இன்றும் கைகொடுத்தால், மீண்டும் வெற்றி பெறலாம்.            

தப்பியது உலக சாதனை            

பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில், 1253.8 புள்ளிகள் பெற்ற சீன அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. தவிர, கடந்த ஆண்டு டெக்ரானில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதலில், சக வீராங்கனைகள் நிகழ்த்திய (1253.7 புள்ளி) சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்நிலையில் தகுதிச் சுற்றின் போது சீன வீராங்கனை பின்பின் ஜாங், அதிக எடை கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் இவரை தகுதி நீக்கம் செய்வதாக, துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் தங்கம் மற்றும் உலக சாதனைக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து சீன அணி சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இதில், துப்பாக்கியின் எடை தவறுதலாக கணக்கிடப்பட்டது தெரிய வர, தங்கம் மற்றும் உலக சாதனை தப்பியது.            

ஹேண்ட்பால்: ‘ஹாட்ரிக்’ தோல்வி      

ஆண்களுக்கான ஹேண்ட்பால் லீக் போட்டியில், இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 12–47 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே சீன தைபே, தென் கொரியாவிடம் வீழ்ந்த இந்திய அணி, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பதிவு செய்தது.      
* பெண்களுக்கான லீக் போட்டியில், இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 12–39 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே தென் கொரியாவிடம் வீழ்ந்த இந்திய அணி, தாய்லாந்திடம் ‘டிரா’ செய்தது.  

பாட்மின்டன்: கடின சுற்றில் செய்னா      

ஒற்றையர் பிரிவு பாட்மின்டனில் செய்னா நேவல், சிந்து உள்ளிட்ட  இந்திய நட்சத்திரங்கள் கடின பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் செய்னா, முதல் சுற்றில் சீனாவின் இகான் வாங்கை சந்திக்கிறார். இகானுக்கு எதிராக விளையாடிய 9 போட்டியில், ஒரே ஒரு முறை மட்டும் செய்னா வென்றுள்ளார். இதேபோல, மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து, காலிறுதியில் சீனாவின் ஜியுருய் லீயை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு கடின சுற்றாக அமைந்தது. இவர்கள், காலிறுதிக்கு முன்னதாக, மலேசியாவின் சோங் வெய் லீ, சீனாவின் சென் லாங் ஆகியோருடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.      

ஜிம்னாஸ்டிக்ஸ்: 8வது இடம்      

பெண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், தீபா கர்மாகர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி, 8வது இடம் பிடித்து ஏமாற்றியது. தீபா மட்டும் ஆறுதல் தந்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்படாதது பின்னடைவாக அமைந்தது.

பெண்கள் அபாரம்: துப்பாக்கிசுடுதல் பெண்கள் 25 மீ ‘பிஸ்டல்’ பிரிவில், இந்திய அணி சார்பில் ராகி சர்னோபத், ஹீனா சித்து, அனிசா சயீத் பங்கேற்றனர். இதில் ‘பிரிசிசன்’ (863), ‘ரேபிட்’ (866) முறையில், மொத்தம் 1729 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, 3வது இடம் பெற்று வெண்கலம் கைப்பற்றியது. 

பெண்கள் தனி நபர் 5 மீ ‘பிஸ்டல்’ பிரிவில் பைனலில், இந்தியாவின் ராகி சர்னோபத், 7வது இடம் பெற்று ஏமாற்றம் தந்தார்.                        அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ போட்டியில் இந்தியாவுக்கு 6வது இடம் தான் கிடைத்தது.

Comments