தென் கொரியாவில் 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. ஹாக்கி போட்டியில்
இந்திய ஆண்கள் அணி, ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் லீக் போட்டியில்
இலங்கையை 8–0 என, வென்ற இந்திய அணி, நேற்று தனது இரண்டாவது போட்டியில்
ஓமனை எதிர்கொண்டது.
இதன் முதல் 15 நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
அடுத்து எழுச்சி பெற்ற இந்திய அணிக்கு 18, 19வது நிமிடங்களில் கிடைத்த
‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை அப்படியே கோலாக மாற்றினார் ரூபிந்தர் பால்.
33வது நிமிடம் அக்ஸ்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். 39வது நிமிடம்
‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பில், ரகுநாத் ஒரு கோல் அடிக்க, இந்தியா 4–0 என,
அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு ராமன்தீப் சிங் (54வது), டேனிஷ்
முஸ்தபா (60வது) தலா ஒரு கோல் அடித்தனர். போட்டியின் கூடுதல் நேரத்தில்
(60+1) ரகுநாத், இரண்டாவது கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க ஓமன் வீரர்கள் எடுத்த எந்த முயற்சியும்
பலிக்கவில்லை. முடிவில், இந்திய அணி 7–0 என்ற கோல் கணக்கில் வெற்றி
பெற்றது.
நாளை நடக்கும் மூன்றாவது லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.
Comments