அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் 11 முன்னணி தொழிலதிபர்களை, காலை உணவின் போது பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா., பொது சபையில் கடந்த செப். 27ம் தேதி உரையாற்றிய பிரதமர், நேற்று, நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப்பதற்காக வாஷிங்டன் செல்வதற்கு முன்பாக, நியூயார்க்கில் இன்று காலை அமெரிக்காவின் 11 முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி கலந்துரையாடினார். காலை உணவின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், கூகுள் நிறுவனத்தின் எரிக் ஸ்மித், பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி, கார்லே நிறுவனத்தின் டேவிட் ருபன்ஸ்டெயின், சிட்டி குரூப் நிறுவன தலைவர் மிக்கேல் கோர்பட், கேட்டர் பில்லர் நிறுவனத்தின் டக் ஓபரல்மென், ஹாஸ்பிரா நிறுவனத்தின் மிக்கேல் பால், மெர்க் அண்டு கோ நிறுவனத்தின் பிரேசியர் உள்ளிட்டோரும் அடக்கம்.

இது தவிர, முக்கிய 6 முக்கிய நிறுவன தலைவர்களான, போயிங் நிறுவன தலைவர் ஜேம்ஸ் மெக் நெர்னி ஜூனியர், பிளாக் ராக் நிறுவன தலைவர் லாரன்ஸ் பிங்க், ஐ.பி.எம்., நிறுவவனத்தின் தலைவர் கின்னி ரோமெட்டி, ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவன தலைவர் ஜெப்ரி இமெல்ட், கோல்டுமென் சாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லாய்ட் பிளான்க்பெயின், கோல்பெர்க் கிராவிஸ் ரோபர்ட்ஸ் நிறுவன தலைவர் ஹென்ரி கிராவிஸ் ஆகியோருடன் மோடி, 15 முதல் 20 நிமிட நேரம் தனித்தனியே சந்தித்து பேசினார்.

இந்நிறுவன தலைவர்களுடன் மோடி பேசும் போது, ஆசியாவிலேயே இந்தியா தான் முதலீட்டுக்கு ஏற்ற இடம் என்றும், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி துறையில் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Comments