சிக்கலான அரசியல்

ஷேக் அப்துல்லா புகழின் உச்சியில் இருந்ததிலிருந்து ஆரம்பித்து இந்திய எதிர்ப்பு அலை ஓங்கி ஒலித்தது வரையிலான காலகட்டத்தை சோஃபி குலாம் முகமது கடந்துவந்துள்ளார். தன் இளமைக்கால அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தியாவுடன் காஷ்மீர் இணையவேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் விருப்பத்துக்குப் பெரும்பாலான காஷ்மீரிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.


தால் ஏரிக்கு அருகில் இருக்கும் தன் அருமையான வீட்டின் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு பேசும்போது அவர் சொன்னார்: பெரும்பாலான காஷ்மீரிகள் இப்போது சுதந்தரமான ஒரு நாட்டில் வாழவே விரும்புகிறார்கள். காஷ்மீர் மீது கண் பதித்திருக்கும் பிராந்தியச் சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரிகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான் அது சாத்தியம் ஆகும். இந்திய ஆட்சி அவ்வளவு நல்லதாக இல்லை. பாகிஸ்தானின் உரிமை கோரலோ சுயநலனை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது.

தனித்த அடையாளம்:

பாகிஸ்தான், காஷ்மீர் என்ற இரண்டு இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. இரண்டுமே வித்தியாசமானவை. காஷ்மீர் முஸ்லிம்களாகிய நாங்கள், எங்களுக்கென்று தனி அடையாளத்தைக் கொண்டவர்கள். எங்களுடைய பிரார்த்தனை வழிமுறைகள் வித்தியாசமானவை. எங்கள் சிந்தனைப் போக்கு, நிறம், உடை எல்லாமே பாகிஸ்தானிகளிடமிருந்து மாறுபட்டது. காஷ்மீரிகளை அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. காஷ்மீரி முஸ்லிமுக்குத் தனித்த அடையாளமும் கலாசாரமும் இருப்பதை அவர்கள் உணரவே இல்லை. நான் கொல்கத்தாவுக்கு, கேரளாவுக்கு, கராச்சிக்குப் போயிருக்கிறேன். என் தோற்றத்தையும் பேசும் விதத்தையும் வைத்து எல்லாருமே நான் ஒரு காஷ்மீரி என்பதை எளிதில் புரிந்துகொண்டுவிடுகின்றனர். நான் பேசும் உருது வித்தியாசமானது. கலாசாரமும் மதமும் இரு வேறுபட்ட அம்சங்கள். காஷ்மீரிகள் தங்களுடைய கலாசாரத்தை மிகவும் பெருமையோடு மதிக்கிறார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அதை மதிப்பதில்லை. இரு நாட்டினருமே எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் ஆக்கிரமிக்கவுமே விரும்புகிறார்கள்.

டோக்ரா வம்சத்தினர்:

காஷ்மீரை டோக்ரா வம்சத்தினர் 1947 வரை ஆண்டனர். அந்த வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் குலாப் சிங் பஞ்சாப் சமவெளியின் வடக்குப் பகுதியில் இருந்த ஜம்முவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தார். அவர் பிரிட்டிஷாரிடமிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆளும் உரிமையை 1846ல் வாங்கியிருந்தார். பிரிட்டிஷாருக்கும் லாஹூரில் இருந்த சீக்கிய அரசுக்கும் இடையிலான சண்டையில் அவர் நடுநிலை வகித்த காரணத்தால்தான் பிரிட்டிஷாரால் வெற்றி பெற முடிந்தது. தோற்ற சீக்கியர்கள் கையிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு நழுவிப்போனது. குலாப் சிங் 75 லட்ச ரூபாய் கொடுத்து பிரிட்டிஷாரிடமிருந்து அந்தப் பகுதியின் ஆட்சி உரிமையை வாங்கிக்கொண்டார்.

இந்தப் புதிய அரச வம்சத்தினர், இந்துக்கள். டோக்ராக்கள். டோக்ரி மொழி பேசுபவர்கள். பஞ்சாபி மொழியின் ஜம்மு வடிவம் என்று அதைச் சொல்லலாம். ஆனால், இவர்கள் எவ்வகையிலும் காஷ்மீரிகள் அல்லர். அந்தப் பகுதி மக்களைப் பொருத்தவரை அந்நியர்களாகவே கருதப்பட்டனர். ஆனால், இவர்கள் தொலைவில் இருந்து ஆட்சி செய்யாமல் உள்ளூரிலிருந்தே ஆட்சி செய்தனர். இளவரசர்கள் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர்களாக அறியப்படாமல் காஷ்மீரின் மகாராஜா என்றே அறியப்பட்டனர்.

பொது தன்மை கிடையாது:

பரம்பரை உரிமையாகவும் பிரிட்டிஷாரின் நல் அனுமதியோடும் டோக்ரா அரச வம்சம் ஒருங்கிணைத்துக்கொண்ட பகுதிகளுக்கு அதன் மகாராஜா ஒருவரைத் தவிர வேறு எந்தப் பொது அம்சமும் கிடையாது. ஐ.நா மத்தியஸ்தக் குழுவின் பிரதான உறுப்பினரும் ஆஸ்திரேலிய சட்ட நிபுணருமான சர் ஓவன் டிக்ஸன், ஐ.நா பாதுகாப்புக் குழுவுக்கு 1950ல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், ஜம்மு காஷ்மீர் பொருளாதாரரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ, மக்கள்திரள்ரீதியாகவோ ஒற்றை அலகு அல்ல என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். மகாராஜா தன் அரசியல் செல்வாக்கின்மூலம் விலைக்கு வாங்கி ஒன்று சேர்த்த தனித்தனியான இரு நிலப்பரப்புகள் அவை. அந்த இரு பகுதிகளுக்கு இடையே இருக்கும் ஒரே ஒற்றுமை, அந்த ஓர் அம்சம் மட்டுமே. இப்படி இணைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதி, 1947க்கு முன்பு வரை 77% இஸ்லாமியர்கள் இருந்த ஒரு பகுதியாக இருந்தது.

ஆங்கிலேய மிஷனரி ஒருவர் ஸ்ரீநகருக்கு முதன்முதலாக வந்தபோது அங்கு சக்கரங்களில் ஓடும் வாகனங்கள் எவையுமே இல்லாததைக் குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரம் அந்தப் பகுதி, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, சீனப் பேரரசின் எல்லைப் பகுதி என்ற மூன்று பெரும் சக்திகளின் சங்கமப் பகுதியாக இருந்தது. அந்த நிலப்பரப்பின் இருப்பு, அழகு ஆகியவற்றால் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆக்கிரமிப்புச் சக்திகளின் கண்களிலிருந்து தப்ப முடியாத ஒன்றாகவும் இருந்தது.

மலைப்பகுதிகளின் நிலை:

மகாராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட பிற பகுதிகளில் மிகவும் முக்கியமானது ஜம்மு. காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் தென்பகுதியில் இது உள்ளது. பயங்கரமான மலைத்தொடர்களால் இது பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி புவியியல்ரீதியாகவும் கலாசாரரீதியாகவும் பஞ்சாப் சமவெளியின் நீட்சியாகவே இருக்கிறது. 1947க்கு முன்பாக, இங்கு மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் இருந்தனர். இப்போது இந்தப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட இங்கு மக்கள்தொகை சிறிது குறைவாகவே இருக்கிறது. இந்துக்கள் மிகுதியாக இருக்கின்றனர். எனினும் சிறுபான்மையினரில் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கின்றனர். பள்ளத்தாக்கை அடுத்திருக்கும் மலைப் பகுதிகளில் சிலவற்றில் மட்டுமே காஷ்மீரி மொழி பேசப்படுகிறது. இந்திய காஷ்மீரின் ஓர் அங்கம் என்ற நிலையை ஜம்மு வேண்டாவெறுப்பாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. காஷ்மீருக்கும் ஜம்முவுக்கும் இடையிலான பிணைப்பு வலுவானதல்ல. மொழி, கலாசாரம், மத அடையாளம் ஆகியவற்றில் ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையில் பொதுவான அம்சம் எதுவுமே இல்லை.

மிகவும் குறுகிய வரையறையின்படிப் பார்த்தால், காஷ்மீர் என்றால் சுமார் ஐம்பது லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும்தான். விரிவான வரையறையின்படிப் பார்த்தால், அதைவிட மூன்று மடங்கு மக்கள் தொகையும் 14 மடங்கு அதிகமான நிலப்பரப்பையும் உள்ளடக்கிய பகுதி.6

ஒன்றுக்கொன்று முரண்:

முன்னாள் சமஸ்தானத்தின்மீது இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உரிமை கோருகின்றன. இது தொடர்பாகக் குழப்பமே நிலவுகிறது. இப்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருக்கிறது. எனவே, அவர்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பவே மாட்டார்கள். அதுபோல, இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு பகுதியிலும் சரி, பவுத்தர்கள் அதிகமாக இருக்கும் லடாக் பகுதியிலும் சரி, பாகிஸ்தானுடன் சேர ஒருவருக்குமே விருப்பம் கிடையாது. பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரை துண்டாடக்கூடாது என்பதிலும் அது சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரே பகுதியாகவே இருக்கவேண்டும் என்பதிலும் மிக உறுதியாக இருக்கின்றனர். இந்த நிலப்பரப்பின் சிக்கலான அரசியலையும் மக்கள் பரவலையும் பொருத்தவரையில் இது மிகவும் அபாயகரமான ஒரு செயல்.
========================
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Comments