பிரதமர்
நரேந்திர மோடியும், தமிழக முதல்வரும் நண்பர்கள் என்பது, அனைவருக்கும்
தெரிந்ததுதான். அப்படியிருந்தும் பா.ஜ., தலைவரான சுப்ரமணிய சாமி, ஜெ.,க்கு
எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசுக்கு எதிரான அறிக்கைகள், இலங்கை
விவகாரத்தில் ராஜபக் ஷேவுக்கு சாதகமான நடவடிக்கை என்று, விளாசித்
தள்ளுகிறார் சுவாமி.
மேயர் தேர்தலிலும், அ.தி.மு.க.,வை கடுமையாக தாக்கி
வருகிறது, தமிழக பா.ஜ., இப்படி இரண்டு கட்சிகளின் தலைவர்கள், நண்பர்களாக
இருந்தும், எப்படி அ.தி.மு.க., - பா.ஜ., இடையே இந்த உரசல் நடைபெற்று
வருகிறது? சுப்ரமணிய சாமியைப் பொறுத்தவரை, அவருக்கு பிரதமர் மற்றும்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது.தமிழகத்தில்,
பா.ஜ.,வை முன்னேற வைக்க அதிரடி நடவடிக்கைகள் தேவை என்று கட்சியும்,
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கருதுகிறதாம். ஒவ்வொரு மாநிலத்திலும், அங்குள்ள
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கட்சி செயல்படுவதில், எந்த தவறும் இல்லை என, நதி
நீர் பிரச்னை தொடர்பாக, அவரை சந்தித்த ஒரு மாநில முதல்வரிடம் சொன்னாராம்
பிரதமர்; இது, தமிழகத்திற்கும் பொருந்தும் என்கிறார், ஒரு சீனியர் பா.ஜ.,
தலைவர். எனவே தான், சுப்ரமணிய சாமி அவருடைய அதிரடி பாணியில், தமிழகத்தில்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக பா.ஜ.,வும் அதே பாதையில் சென்று
கொண்டிருக்கிறது என்று சொல்லும் டில்லி பா.ஜ., தலைவர்கள், '2016ல் நடைபெற
உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இப்போதே நாங்கள் தயாராகி
கொண்டிருக்கிறோம்' என்கின்றனர்.தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு மறுப்பு: தேர்தல் கமிஷன் நாடு முழுவதும் தேர்தல்களை நடத்தி, உலக அளவில் மிகவும் நல்ல பெயரைப் பெற்றுள்ளது. ஆனாலும், ஆணையத்திற்குள் நடைபெறும் அரசியல் மிகப் பெரிய அரசியல் கட்சிகளை துாக்கி சாப்பிட்டுவிடும் அளவிற்கு உள்ளது. ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள, ஒரு அதிகாரி, இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு பயணத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏறக்குறைய உலகம் சுற்றும் வாலிபனாகவே மாறி, ஊர் சுற்றி வந்தவர். இதனால் மற்ற அதிகாரிகள், இவர் மீது கடுப்பில் உள்ளனர்.சமீபத்தில், வெளிநாட்டில் நடைபெற்ற தேர்தலுக்கு பார்வையாளராக இருந்த அதிகாரி, சில மாநில தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் சென்றார். வழியில் ஒரு நாட்டில் இறங்கிய போது, சில பிரச்னைகள் ஏற்பட்டதாம். இதனால், எந்த நாட்டில் தேர்தலைப் பார்வையிட வேண்டுமோ, அங்கு தேர்தல் முடிந்த பின் தான், இந்த அதிகாரிகள் குழு சென்றடைந்ததாம்.வேறு துறையிலிருந்து ஆணையத்திற்கு இந்த அதிகாரிகள் வந்து, 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே தன் சொந்த துறைக்கு செல்ல வேண்டிய நிலை. ஆனால், இவருக்கு பதவி நீடிப்பு தர வேண்டும் என்று, பிரதமரின் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த அதிகாரி குறித்து, பிரதமர் அலுவலகம் விசாரித்ததில் அனைத்து விவரங்களும் தெரிய வந்ததாம். இதனால் பதவி நீடிப்பு மறுக்கப்பட உள்ளதாம்.
தயாராகும் பா.ஜ., தலைவர்கள்:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்; ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 2017ஆகஸ்டில் ஓய்வு பெறுகிறார். இந்த பதவிகளை நிரப்ப, இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இருப்பினும், இந்த பதவிகளில் அடுத்து யாரை அமர்த்த வேண்டும் என்பது குறித்து, இப்போதே ஆலோசனையை ஆரம்பித்து விட்டாராம், பிரதமர் மோடி.பா.ஜ., கட்சியில், மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் வெங்கையா நாயுடு. இவர்களுக்கு அமைச்சரவை யில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூவரில் ஒருவரை, ஜனாதிபதி பதவிக்கும், இன்னொருவரை துணை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவும் இப்போதே ஆலோசனையை துவங்கி விட்டாராம், மோடி. ஜனாதிபதி பதவியில் அமர சுஷ்மாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்களை இப்படி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகளில் அமர்த்திவிட்டால் தான், மிகவும் சுதந்திரமாக, எந்தவித கட்சி அரசியலுக்கும் கட்டுப்படாமல் செயல்படலாம் என்பது, மோடியின் திட்டம் என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.
Comments