தென் கொரியாவின் இன்ச்சானில், 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன்
வில்வித்தை ‘காம்பவுண்டு’ பிரிவு பைனலில், இந்திய ஆண்கள் அணி, தென்
கொரியாவை சந்தித்தது.
இந்தியா சார்பில் சந்தீப் குமார், அபிஷேக் வர்மா,
ரஜத் சவுகான் அடங்கிய அணி பங்கேற்றது.
இதன் 12 ஷாட்டுகள் அடங்கிய முதல் பாதியில் இந்திய அணி 112–109 என்ற
கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து அசத்திய இந்திய அணி, முடிவில்
227–225 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியாவை சாய்த்து, தங்கம்
கைப்பற்றியது.
ஆசிய வில்வித்தை போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இது தான் முதன் முறை. இதற்கு முன் 1 வெள்ளி, 3 வெண்கலம் தான் வென்றிருந்தது.
இரண்டாவது தங்கம்:
ஆண்கள் ஸ்குவாஷ் பைனலில் இந்தியா, மலேசிய அணிகள் மோதின. இதன் முதல்
போட்டியில் ஹரிந்தர் பால் சிங் 11–8, 11–6, 8–11, 11–4 என்ற கணக்கில்
வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில், இந்தியாவின் தமிழக வீரர் சவுரவ்
கோஷால், 6–11, 11–7, 11–6, 12–14, 11–9 என, போராடி வெற்றி பெற்றார்.
முடிவில், 2–0 என, வென்ற இந்திய அணி, தங்கம் கைப்பற்றியது. ஆசிய ஸ்குவாஷ் வரலாற்றில் இந்திய அணி, தங்கம் வெல்வது இதுவே முதன் முறை.
தீபிகா வெள்ளி:
நேற்று நடந்த பெண்கள் ஸ்குவாஷ் பைனலில், தீபிகா பல்லீகல், அலங்காமணி
(9–11, 10–12, 2–11), தீபிகா பல்லீகல் (7–11, 6–11, 3–11) அடங்கிய இந்திய
அணி, வலிமையான மலேசியாவிடம், 0–2 என, வீழ்ந்தது.
இருப்பினும், இரண்டாவது இடம் பெற்ற இந்தியா, ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் முதன் முறையாக வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
அபிஷேக் ஏமாற்றம்:
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு தனி நபர் பிரிவு பைனலில், இந்தியாவின்
அபிஷேக் வர்மா, ஈரானின் இஸ்மாயிலை சந்தித்தார். இதில் துவக்கத்தில்
முன்னிலையில் இருந்த அபிஷேக், அடுத்தடுத்து சொதப்பியதால், 141–145 என,
வீழ்ந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இரண்டு வெண்கலம்:
பெண்கள் ‘காம்பவுண்டு’ வில்வித்தையில், வெண்கல பதக்கத்துக்கான
போட்டியில் பர்வஷா, சுரேகா, திரிஷா தேப் அடங்கிய இந்திய அணி, 224–217என்ற
கணக்கில் ஈரானை வீழ்த்தி வெண்கலத்தை தட்டிச் சென்றது.
பெண்கள் ‘காம்பவுண்டு’ தனி நபர் பிரிவு, வெண்கல பதக்கத்துக்கான
போட்டியில், இந்தியாவின் திரிஷா தேப், தாய்லாந்தின் ஹுவாங்கை 138–134 என,
கடைசி நேரத்தில் வென்று, வெண்கலம் கைப்பற்றினார்.
செயின் சிங் அபாரம்
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50 மீ., ‘ரைபிள் 3 பொசிசன்ஸ்’ பிரிவில்
இந்தியாவின் (3,480 புள்ளி) ககன் நரங், ஜெயின் சிங், சஞ்சீவ் ஜோடி 1 புள்ளி
வித்தியாசத்தில், வெண்கலப் பதக்கத்தை ஜப்பானிடம் (3,481) இழந்தது.
இதேபிரிவில் 7வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறிய செயின் சிங், 441.7 புள்ளிகளுடன், 3வது இடம் பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.
பைனலில் பூவம்மா, மன்தீப்
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில், இந்தியாவின்
பூவம்மா பந்தய துாரத்தை 52.17 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
இதன்மூலம் பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு 400 மீ., தகுதிச் சுற்றில்,
பந்தய துாரத்தை 53.06 வினாடியில் கடந்த 2வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை
மன்தீப் கவுர் பைனலுக்கு முன்னேறினார்.
சாரதா ஏமாற்றம்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில், பந்தய துாரத்தை
12.04 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சாரதா 5வது இடம் பிடித்து, பைனல்
வாய்ப்பை கோட்டைவிட்டார்.
பிரீஜா பின்னடைவு
பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 32
நிமிடம் 29.17 வினாடிகளில் கடந்த இந்தியாவின் பிரீஜா ஸ்ரீதரன் 7வது இடம்
பிடித்து பதக்கம் வெல்ல தவறினார்.
இந்திய வீரர்கள் சொதப்பல்
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் பங்கேற்ற இந்தியாவின் கேதா
ராம் 7வது, சுரேஷ் குமார் 9வது இடங்களை பிடித்து, பதக்க வாய்ப்பை இழந்தனர்.
பைனலில் ஆரோக்ய ராஜிவ்
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின்
ஆரோக்ய ராஜிவ் , குன்ஹு முகமது அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில்
பந்தய துாரத்தை 46.22 வினாடிகளில் கடந்த ஆரோக்ய ராஜிவ், 3வது இடம் பிடித்து
பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் முகமது, 4வது இடம்
பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.
லலிதா வெள்ளி
பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபில்சேஸ்’ ஓட்டத்தில் முதலாவதாக வந்த
பக்ரைனின் ருத் ஜெபட் (9 நிமிடம், 31.36 வினாடி), கடைசி நேரத்தில் ஒரு காலை
‘டிராக்கிற்கு’ வெளியில் வைத்து விட்டு, பின் சுதாரித்து உள்ளே வந்து
ஓடினார். இதற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க, பதக்கம் வழங்கும்
நிகழ்ச்சியின் போது இவர் தகுதி நீக்கம் செய்யப்பட, தங்கத்தை இழந்தார்.
இதையடுத்து, கென்யாவில் இருந்து பக்ரைனுக்கு குடியுரிமை பெற்ற ஜெபட், 17,
அழுதுகொண்டே வெளியேறினார்.
இவருக்கு அடுத்த மூன்று இடங்களில் வந்த சீனாவின் லி ஜென்ஜு(தங்கம்),
இந்தியாவின் லலிதா(வெள்ளி), சுதாசிங்(வெண்கலம்) ஆகியோர் முதல் மூன்று
இடங்களை பிடித்ததாக அறிவிக்கப்பட்டு, பதக்கம் வென்றனர்.
ரசிகர்கள் வாழ்த்து
நேற்று ஆண்கள் வில்வித்தை அணிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதையடுத்து,
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இது முடிந்ததும், இந்திய வீரர்கள்
அபிஷேக், ரஜத், சந்தீப் இணைந்து, ‘பாரத் மாதாகி ஜே!’ என, குரல்
எழுப்பியதும் அரங்கில் இருந்த இந்திய ரசிகர்களும் இணைந்து கொண்டு, வாழ்த்து
தெரிவித்தனர்.
ஒரே நாளில் 11 பதக்கம்
ஆசிய விளையாட்டில் நேற்று மட்டும் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்
கிடைத்தன. இதில் 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் அடங்கும். அதிகபட்சமாக
வில்வித்தையில் இருந்து ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்தது.
ஸ்குவாஷ் (1 தங்கம் + 1 வெள்ளி), தடகளம் (1 வெள்ளி + 1 வெண்கலம்),
மல்யுத்தம் (2 வெண்கலம்), துப்பாக்கி சுடுதல் (ஒரு வெண்கலம்) போட்டிகளில்
இருந்தும் பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் 16வது
இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு முன்னேறியது
காலிறுதியில் மேரி கோம்
ஆசிய விளையாட்டு பெண்கள் குத்துச்சண்டை 48–51 கி.கி., எடைப்பிரிவில்,
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மேரி கோம், யெஜி கிம்மை
சந்தித்தார். இதில் மேரி கோம் 3–0 என, வெற்றி பெற்று காலிறுதிக்குள்
நுழைந்தார்.
* மற்றொரு போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி (57–60 கி.கி.,), வட கொரியாவின் சுங்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
* 69 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி, மங்கோலியாவின் உன்ரத்தை வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
* 52 கி.கி., போட்டியில் கவுரவ் பிதுரி, நேபாளத்தை பிரேமை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.
அரையிறுதியில் சானியா ஜோடி
ஆசிய விளையாட்டு டென்னிஸ் பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின்
சானியா மிர்சா, பிரார்த்தனா ஜோடி 6–1, 7–6 என்ற கணக்கில், தாய்லாந்து
நிச்சா, பியாங்டம் ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
* கலப்பு இரட்டையர் காலிறுதியிலும், இந்தியாவின் சானியா மிர்சா, சாகேத்
மைனேனி ஜோடி 6–3, 7–6 என தென் கொரியாவின் ஹான் நலே, கிம் சியாங்குய் ஜோடியை
வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
பாம்ப்ரி அசத்தல்
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், இந்திய வீரர் யூகி பாம்ப்ரி,
தாய்லாந்தின் தனாயை 6–3, 6–2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு
முன்னேறினார்.
* ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, திவிஜ்
சரண் ஜோடி, சீனா தைபேவின் வாங், ஹன் ஜோடியை (7–5, 7–6) வீழ்த்தியது.
* மற்றொரு காலிறுதியில் சனம் சிங், சாகேத் மைனேனி ஜோடி, 6–2, 7–6 என, சீன தைபே ஜோடியை வென்றது.
* மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சனம் சிங் (6–7, 4–6), சீன தைபேவின் யென் லுவிடம் வீழ்ந்தார்.
வாலிபால்: மீண்டும் தோல்வி
வாலிபால் பெண்கள் காலிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை சந்தித்தது. இதில் 11–25, 12–25, 10–25 என்ற நேர் செட்களில் வீழ்ந்தது.
மல்யுத்தம்: இரண்டு வெண்கலம்
ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ்,
‘பிரீஸ்டைல்’ 48 கி.கி., எடைப் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் டொசாகாவிடம்
4–6 என, வீழ்ந்தார். பின், வெண்கலத்துக்கான போட்டியில் மங்கோலியாவின்
நரன்ஜெரலை (0–4) வீழ்த்தி, வெண்கலம் வென்றார்.
* 63 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் கீத்திகா,
சீனாவின் ஜிலுாவிடம் 2–11 என, தோல்வியடைந்தார். பின், வெண்கலப்
பதக்கத்துக்கான போட்டியில், வியட்நாமின் லி தி ஹியனை வீழ்த்தி (0–5),
வெண்கலம் வென்றார்.
அமித் குமார் அதிர்ச்சி
ஆண்கள் 57 கி.கி., ‘பிரீஸ்டைல்’ பிரிவில், சமீபத்திய காமன்வெல்த்
போட்டியில் தங்கம் வென்ற அமித் குமார், காலிறுதிக்கு முந்தைய சுற்றில்
ஜப்பானின் மொரிஷிட்டாவிடம் தோற்றுப் போனார்.
* 70 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீரர் பர்வீன் ராணா, ஜப்பானின் கோஜிமாவிடம் வீழ்ந்தார்
Comments