கார் விபத்து: அமைச்சர் சம்பத் படுகாயம்

பண்ருட்டி:கடலுார் அருகே, லாரியும், காரும் மோதி கொண்ட விபத்தில், தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர், சம்பத் படுகாயம் அடைந்தார்.உள்ளாட்சி இடைத்தேர்த லில், கடலுார் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் குமரனை ஆதரித்து, அமைச்சர் சம்பத், நேற்று முன்தினம், பிரசாரம் மேற்கொண்டார். இரவு, 10:30 மணிக்கு, பிரசாரத்தை முடித்துக் கொண்டு, காரில், பண்ருட்டி யில் உள்ள தன் வீட்டிற்கு புறப்பட்டார்.


கடலுார் அடுத்த, எஸ்.குமராபுரம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற மணல் லாரியை, அமைச்சரின் கார் முந்திச் செல்ல முயன்றது. அப்போது, காரின் பக்கவாட்டில், லாரி மோதியது. இதனால், கார், சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியது. லாரியும், நிலைத்தடுமாறி, சாலையோர மரத்தில் மோதி நின்றது.விபத்தில், அமைச்சர் சம்பத், கார் டிரைவர் ராஜேந்திரன், லாரி டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர், படுகாயமடைந்தனர்.அமைச்சர் காரை, பின் தொடர்ந்து வந்த அ.தி.மு.க.,வினர், காயமடைந்தவர்களை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அமைச்சர் சம்பத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில், தையல் போடப்பட்டது.

தகவலறிந்த அ.தி.மு.க.,வினர், மருத்துவமனையில் குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை, அமைச்சர், மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, பண்ருட்டி, திருமலை நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்றார்.கலெக்டர் சுரேஷ்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள், அமைச்சரை சந்தித்து, ஆறுதல் கூறினர்.விபத்து குறித்து, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த, லாரி டிரைவர் ராமச்சந்திரனிடம், விசாரித்து வருகின்றனர்.

Comments