சகாயம் நியமனத்தை எதிர்த்த தமிழக அரசின் மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

புதுடில்லி: தமிழகத்தில், கிரானைட் உட்பட, கனிம குவாரிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.சட்டவிரோதமாக கனிம குவாரிகள் நடத்துவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த, 'டிராபிக்' ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தமிழகத்தில் உள்ள கனிம குவாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, இரண்டு மாதத்திற்குள், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. மேலும், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்துக்கு தேவையான உதவிகளை, உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். அவரது பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும்' என்றும் தெரிவித்தது. அத்துடன், வழக்கு விசாரணையை, அடுத்த மாதம், 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் ஆற்று மணல், ஜல்லி, கருங்கல், கிரானைட் உட்பட, கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, ஏற்கனவே பல கட்டங்களாக விசாரணைகள் நடந்து வருகின்றன .அனைத்து விசாரணைகளும், உரிய முறையில், தொய்வின்றி தமிழக அரசால் கையாளப்படுகிறது. இந்நிலையில், கனிம குவாரிகள் முறைகேடு குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஏற்கனவே நடந்து வரும் விசாரணைகள், பாதிக்க வாய்ப்புள்ளது. புதிதாக ஒரு அதிகாரி விசாரிக்க ஆரம்பித்தால், ஏற்கனவே நிலுவையில் உள்ள விசாரணைகளில், மேலும் காலதாமதம் ஏற்படலாம்.எனவே, கனிமவள முறைகேடுகள் குறித்து, ஏற்கனவே நடந்து வரும் விசாரணைகளில், காலவிரயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட் நியமித்த சகாயம் குழு நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும், சகாயம் குழுவின் அறிக்கை, தமிழக அரசுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், இந்த குழுவிற்கு, தமிழக அரசு உதவிபுரியும் என்ற நம்பிக்கை தங்களுக்ககு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments