எட்டு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., - ம.தி.மு.க., கூட்டணி அமையும்
வாய்ப்பு, பிரகாசமாகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு, பச்சைக்
கொடி காட்டும் வகையில், வைகோவின் பேச்சை குறிப்பிட்டு, தி.மு.க., தலைவர்
கருணாநிதி, கருத்து வெளியிட்டுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இணைகிறது என்ற கருத்தை, கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசுகின்றன.
கடந்த காலங்களில், வைகோ குறித்து பேசுவதையோ, அவர் குறித்து கருத்து தெரிவிப்பதையோ, தவிர்த்து வந்த கருணாநிதி, தனது அறிக்கையில், ம.தி.மு.க., பூந்தமல்லியில் நடத்திய நிகழ்ச்சியையும், அதில் வைகோ, தி.மு.க., ஆட்சி குறித்து பேசியதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.முன்பு தி.மு.க., ஆட்சியை கடுமையாக விமர்சித்த வைகோ, தற்போது, அக்கட்சிக்கு தோள் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க., ஆட்சியை விமர்சித்து வருகிறார். இது மட்டுமின்றி, தற்போது தி.மு.க., ஆட்சியை பாராட்டவும் ஆரம்பித்துள்ளார்.இதன்மூலம், தி.மு.க., - ம.தி.மு.க., கட்சிகள், தங்களுக்கு இடையேயான கசப்புகளை மறந்து, தேர்தல் கூட்டணியை நோக்கி நெருங்குகின்றன என, அக்கட்சிகளின் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.நேற்று வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி மேலும் கூறியிருப்பதாவது:கனிம வள ஊழல் தொடர்பாக, உயர் நீதிமன்றம் அமைத்த, சகாயம் குழுவின் விசாரணையில், பல உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதற்காக, அக்குழுவுக்கு தடை விதிக்க, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.மக்கள் நலப் பணியாளர்களுக்கு, விரைவில் பொழுது விடியும். எனவே, தற்கொலை செயல்களை அவர்கள் கைவிட வேண்டும்.இனம், மொழி ஆகியவற்றில் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், இந்தி மொழியை மட்டும் பிரபலப்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் பேசியுள்ளனர். அது, வருந்தத்தக்கது. 'இந்தி பேசாத மாநிலங்கள், அம்மொழியை ஏற்கும் வரை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்' என்ற, முன்னாள் பிரதமர் நேருவின் உறுதிமொழியை சீர்குலைக்கக் கூடாது.உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம், கேரள கவர்னராக பதவியேற்றுள்ளார். அதற்கு, பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவையெல்லாம், நீதிபதி சதாசிவத்துக்கு தேவையா என்பதே என் கருத்து.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
Comments