மோடி - ஜின்பிங் பேச்சுவார்த்தையில் எல்லைப்பிரச்னைக்கு முக்கியத்துவம்

புதுடில்லி: இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிடம் எல்லைப்பிரச்னை குறித்து மோடி தனது கவலையை தெரிவித்தார். எல்லைப்பிரச்னையை தீர்க்க சீனா உறுதியுடன் இருப்பதாக ஜின்பிங் தெரிவித்தார்.இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று டில்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் 90 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்குப்பின், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில் பிரதமர் மோடி பேசியதாவது: சீனாவுடனான உறவுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். பழமை வாய்ந்த கலாச்சார பெருமை கொண்டவை இந்தியா மற்றும் சீனா நாடுகள். இரு நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்டவை. இரு நாட்டு எல்லையிலும், உறவிலும் அமைதி நிலவ வேண்டும். அப்போது நமது உறவின் ஆற்றலை உணர முடியும். ஒவ்வொருவரும் மற்றவரின் உணர்வுகளையும், கவலைகளையும் மதிக்கவேண்டும். கடந்த 2 நாட்களாக, இந்தியா மற்றும் சீனா நாடுகள் பல கட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தியா சீனா இடையே வர்த்தக ஏற்றத்தாழ்வு இருப்பது என்னை கவலையடையச் செய்கிறது. இரு நாடுகளும் ரயில்வே துறையில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை துவங்க ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவின் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை வரவேற்கிறேன். இந்தியாவில் இரண்டு தொழிற்பூங்காக்களை அமைக்க ஒப்புக்கொண்டதற்காக நன்றி. நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் செல்ல புதிய பாதைக்கு அனுமதி வழங்கியதற்காக ஜின்பிங்குக்கு நன்றி. பயங்கரவாதம் மற்றும் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

தொடர்ந்து ஜின்பிங் பேசுகையில், இந்தியாவுக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இந்தியா வெகுவாக முன்னேறி வருகிறது. நானும் மோடியும் ஆழமான ஆலோசனைகளை மேற்கொண்டோம். இந்தியா சீனா நாடுகள் உலகளவில் வேகமாக வளர்ந்து வருபவை. சீனா வருமாறு மோடியை அழைக்கிறேன். பாதுகாப்பு துறையில் ஒத்துழைக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பிராந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவும் சீனாவும் இரட்டை இன்ஜின் போல செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் முக்கியமான அண்டை நாடுகள். இந்தியாவுடனான எல்லைப்பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சீனா உறுதியுடன் உள்ளது. இந்தியாவும் சீனாவும் ஒருமித்த குரலில் பேசினால் அதை இந்த உலகமே உற்று நோக்கும். அடுத்த 5ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் அளவிற்கு சீனா முதலீடு செய்யும். இவ்வாறு ஜின்பிங் பேசினார்.

Comments