தொழில் வளர்ச்சி பட்டியலில் தமிழகம் கடைசி இடம்: பா.ஜ., காங்., கடும் விமர்சனம்

புதுடில்லி: மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள, கடந்த 2012-13ம் ஆண்டுக்கான சிறப்பு பிரிவு அல்லாத மாநிலங்களில் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில், தொழில் வளர்ச்சியில் பீகார் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.
கடந்த 2012-13ம் ஆண்டுக்கான சிறப்பு பிரிவு அல்லாத மாநிலங்களில் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை, மத்திய புள்ளியியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொழில் வளர்ச்சியில் பீகார் மாநிலம் 10.73 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டில் பீகார் வளர்ச்சி சதவீதம் 15.03 சதவீதமாகவும், 2011-12ல் 10.29 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ம.பி., மாநிலம் 9.89 சதவீதத்துடன் 2வது இடத்தையும், டில்லி 9.33 சதவீத வளர்ச்சியுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த வரிசையில் குஜராத்திற்கு 6வது இடம் (7.97%) கிடைத்துள்ளது. தமிழகம் 3.39 சதவீத வளர்ச்சியுடன் 18 மாநிலங்கள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் சராசரி தொழில் வளர்ச்சி வீதமான 4.5 சதவீதத்தை விட தமிழகம் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பா.ஜ., - காங்., விமர்சனம்:

தொழில்வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. பா.ஜ., தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறுகையில், தொழில் வளர்ச்சியில் வடமாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கடைசி இடத்தில் உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்ததன் காரணமாக ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

Comments