சிறையில் ஜெ... வலியக் கிடைத்த அரசியல் லாபத்தை அறுவடை செய்யுமா திமுக?

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு இனி 10 ஆண்டுகாலம் தேர்தல் அரசியலுக்கு வனவாசம்தான்.. இந்த வனவாச காலத்தை திமுக அரசியல் ரீதியாக பயன்படுத்தி தனக்கான வசந்தகாலமாக்கிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த அரை நூற்றாண்டுகாலமாக திமுக அல்லது அதிமுக என்ற இரு மாபெரும் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இதில் அதிமுக என்ற மாபெரும் கட்சி இப்போது ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. அதிமுகவில் இரண்டாம் நிலைத் தலைவரோ வாரிசு அரசியலோ எதுவும் இல்லை. அங்கே ஜெயலலிதா என்ற ஒற்றை மனிதரின் ஒட்டுமொத்த சர்வாதிகாரமும் கோலோச்சிக் கொண்டிருந்தது.

ட்யூனான அமைச்சர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா விரும்புகிறவர்கள்தான் ஏற்றத்தை பெற முடியும்.. தான் ஒரு அமைச்சராக இன்னமும் நீடிக்கிறேனா என்று ஒவ்வொரு நாளும் பதற்றத்துடனேயே வாழ்வதற்கு அதிமுக அரசின் அமைச்சர்கள் ஒவ்வொருவருமே தங்களை 'ட்யூனாக்கிக்' கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் வனவாசம் இப்படி அதிமுகவின் ஒற்றை முகமாக இருந்த ஜெயலலிதாவுக்கு சட்டம் 'அரசியல் வனவாச'த்தை கொடுத்திருக்கிறது. அதுவும் ஓராண்டு ஈராண்டு அல்ல.. மொத்தம் 10 ஆண்டுகாலம் இனி அவர் தேர்தல் அரசியலில் போட்டியிடவே முடியாது என்ற நிலை. இந்த நிலை உடனடியாகவோ அல்லது நீண்டகாலத்திலோ மாறுவதற்கான வாய்ப்புகள் சொற்பத்திலும் சொற்பமே.

அதிமுக யார் வசம்? இதனால் அதிமுகவின் எதிர்காலம் குறித்த அலசல்களும் கணிப்புகளும் ஊடக களத்தில் குதித்து விட்டன. உண்மைதான்.. இனி அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தேர்தல் அரசியலில் இல்லாத ஜெயலலிதாவை அதிமுக நிர்வாகிகள் ஏற்பார்களா? வீடு நிறைய நிறைந்து கிடக்கும் ஆபரணங்கள்.. ஆளே இல்லை என்ற நிலையில் 'ஆக்கிரமிப்பாளர்கள்' கோதாவில் குதித்துவிடமாட்டார்கள்? இப்படி நீள்கிறது பல கேள்விகள்..

திமுக என்ன செய்யும்? இவை ஒருபுறமிக்க அனாதரவாய் விடப்பட்ட அதிமுகவின் நிலையை தங்களுக்குள் அடித்துக் கொண்டிருக்கும் திமுக எப்படி சாதகமாக்கிக் கொள்ளப் போகிறது என்ற யதார்த்த கேள்வியும் இப்போது கை கோர்த்துக் கொண்டிருக்கிறது.

பீதியில் தொண்டர்கள்.. திமுகவும் அதிமுகவுக்கு வலுவான கட்சியே. ஆனால் திமுகவுக்குள் வலம் வரும் சம்பவங்கள், உலா வரும் மாவட்ட சாம்ராஜ்யங்களை நடத்தும் குறுநில மன்னர்கள், உச்சமாக தலைமைப் பதவிக்கான 'அரண்மனை சதி' போராட்டங்கள் என்னாகுமோ கட்சி என்று தொண்டர்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.

அருமையான வாய்ப்பு.. இப்படிப்பட்ட ஒரு பலவீனமான நிலையில் எதிரிக் கட்சியான அதிமுக, தீர்ப்பென்னும் பெரும் சுனாமியில் தலைமையையே வனவாசத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதுவும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் திமுகவுக்கு வலியக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு.

அதிமுக நிலை.. எதிரியின் பலவீனத்தில்தான் திமுக தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பது உண்மையில் சோகம்தான். இந்த தடுமாற்றமான அரசியல் நிலையில் வலுவில் ஊன்றி நின்று பல கிலோ மீட்டர் பாய்ச்சலையே கொடுக்கக் கூடிய வலுகம்பாக அதிமுகவின் நிலைமை திமுகவுக்குக் கிடைத்திருக்கிறது.

பெருங்கூட்டணி வியூகம் தேர்தல் களத்தில் தலைவன் இல்லாத கட்சியாக இருக்கப் போகிறது..அதிமுக. இதனால் தங்களது அடுப்படி சர்க்கார் அரசியலை ஒழித்துக் கட்டி ஒரங்கட்டிவிட்டு இருக்கின்ற அத்தனை கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பெரும் பேரலையைப் போல பெருங்கூட்டணிக்கான வியூகம் வகுத்து செயல்பட வேண்டிய பொறுமையான பெருந்தருணம் திமுகவுக்கு வந்து விழுந்திருக்கிறது. அறுவடை செய்ய அணியமாகுமா திமுக? என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் இருக்கும் முதன்மை கேள்வி.

Comments