இன்ச்சான்: ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில், 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தார் யோகேஷ்வர் தத்.
தென் கொரியாவில் உள்ள இன்ச்சான் நகரில், 17வது ஆசிய விளையாட்டு
நடக்கிறது. ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் ‘பிரீஸ்டைல்’ 65 கி.கி.,
எடைப்பிரிவில் யோகேஷ்வர் தத் பங்கேற்றார்.
காலிறுதியில் வடகொரியாவின்
ஜின்க்யோக் காங்கை வீழ்த்திய யோகேஷ்வர் தத், அரையிறுதியில் சீனாவின் கடாய்
ஏர்லனபைக்கை தோற்கடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய யோகேஷ்வர் 3–0
என தஜிகிஸ்தானின் ஜலிம்கான் யுசுபோவை வீழ்த்தி, தங்கம் வென்றார்.
இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின், ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில்
இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. முன்னதாக 1986ல் சியோலில் நடந்த ஆசிய
விளையாட்டில், இந்தியாவின் கர்தார் சிங் தங்கம் வென்றார். தவிர இது, ஆசிய
விளையாட்டில் யோகேஷ்வர் வென்ற இரண்டாவது பதக்கம். கடந்த 2006ல் தோகாவில்
நடந்த ஆசிய விளையாட்டில் பங்கேற்ற இவர், ‘பிரீஸ்டைல்’ 60 கி.கி.,
எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். கடந்த 2012ல் லண்டனில் நடந்த
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், சமீபத்தில் முடிந்த கிளாஸ்கோ
காமன்வெல்த் விளையாட்டில் தங்கத்தை கைப்பற்றினார்.
குஷ்பிர் வெள்ளி:
பெண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் குஷ்பிர்
கவுர், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 33 நிமிடம், 07 வினாடிகளில் கடந்து
இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம், ஆசிய விளையாட்டு 20 கி.மீ., நடை
போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.
இவர், இந்த ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப்பில்
வெண்கலம் வென்றார்.
பபிதா ஏமாற்றம்:
பெண்களுக்கான மல்யுத்த ‘பிரீஸ்டைல்’ 55 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்ற
இந்தியாவின் பபிதா குமாரி, காலிறுதியில் கஜகஸ்தானின் அப்டில்டினாவை
வீழ்த்தினார். பின், அரையிறுதியில் ஜப்பானின் யோஷிடாவிடம் தோல்வி
அடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், பபிதா 1–3
என சீனாவின் ஜோங்கிடம் வீழ்ந்து, பதக்கம் வெல்ல தவறினார்.
ஆண்களுக்கான மல்யுத்த ‘பிரீஸ்டைல்’ 97 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்ற
இந்தியாவின் சத்யவர்த் கடியான், காலிறுதியில் தோல்வி அடைந்தார். பின்,
‘ரெபேஜஸ்’ வாய்ப்பில் பாகிஸ்தானின் பிலால் அவானை வீழ்த்திய சத்யவர்த்,
வெண்கலத்துக்கான போட்டியில் கஜகஸ்தானின் மமெத்திடம் வீழ்ந்து பதக்கத்தை
கோட்டைவிட்டார்.
பெண்களுக்கான மல்யுத்த ‘பிரீஸ்டைல்’ 75 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஜோதி தோல்வி அடைந்து ஏமாற்றினார்.
இர்பான் ஏமாற்றம்:
ஆண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் இர்பான்,
பந்தய துாரத்தை ஒரு மணி நேரம் 23 நிமிடம், 18 வினாடிகளில் கடந்து 5வது இடம்
பிடித்தார். இதன்மூலம் பதக்க வெல்லும் வாய்ப்பை இழந்து ஏமாற்றினார்.
மற்றொரு இந்திய வீரர் கணபதி கிருஷ்ணன், அவரது முழங்காலை வளைத்து தவறுதலாக
ஓடியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பூவம்மாவுக்கு வெண்கலம்
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 52.36
வினாடிகளில் கடந்த இந்தியாவின் பூவம்மா, 3வது இடம் பிடித்து வெண்கலம்
வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மன்தீப் கவுர் (53.38 வினாடி) 6வது
இடம் பிடித்து ஏமாற்றினார்.
* ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 45.92
வினாடிகளில் கடந்த இந்தியாவின் ஆரோக்கியராஜிவ், மூன்றாவது இடம் பிடித்து
வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் முகமது (46.53 வினாடி), 7வது இடம்
பிடித்து ஏமாற்றினார்.
மஞ்சுவுக்கு வெண்கலம்
பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் பைனலில், பங்கேற்ற இந்தியாவின்
மஞ்சு பாலா, அதிகபட்சமாக 60.47 மீ., துாரம் எறிந்து, மூன்றாவது இடம்
பிடித்தார். இதன்மூலம் வெண்கலத்தை கைப்பற்றினார்.
பைனலில் சித்தாந்த்
ஆண்களுக்கான 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில்
பங்கேற்ற இந்தியாவின் சித்தாந்த் திங்கலாயா, பந்தய துாரத்தை 13.74
வினாடிகளில் கடந்து 5வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு தகுதி
பெற்றார்.
அரையிறுதியில் மேரி கோம்
பெண்களுக்கான குத்துச்சண்டை 51 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில்,
இந்தியாவின் மேரி கோம் 3–0 என சீனாவின் ஹைஜுவானை வீழ்த்தி, அரையிறுதிக்கு
முன்னேறினார்.
* பெண்களுக்கான 60 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சரிதா தேவி 3–0 என மங்கோலியாவின் ஒயுன்ஜெரலை தோற்கடித்தார்.
* பெண்களுக்கான 75 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில், இந்தியாவின் பூஜா ராணி 3–0 என, சீனதைபேயின் டாரா புளோரா ஷெனை வீழ்த்தினார்.
இதன்மூலம் பெண்களுக்கான குத்துச்சண்டையில் குறைந்தபட்சம் மூன்று வெண்கலம் உறுதியானது.
காலிறுதியில் தேவேந்திரோ சிங்
ஆண்களுக்கான குத்துச்சண்டை 49 கி.கி., எடைப்பிரிவு ‘ரவுண்ட்–16’
போட்டியில், இந்தியாவின் தேவேந்திரோ சிங், ,லாவோசின் பவுன்போன் லசாவோங்சியை
வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
கபடியில் வெற்றி முகம்
ஆண்களுக்கான கபடி போட்டியில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான்,
தாய்லாந்து, வங்கதேசம் அணிகளுடன் உள்ளது. நேற்று நடந்த முதல் லீக்
போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி
30–15 என வெற்றி பெற்றது. இன்று நடக்கும் போட்டியில், இந்தியா, தாய்லாந்து
அணிகள் மோதுகின்றன.
* பெண்களுக்கான கபடி போட்டியில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் வங்கதேசம்,
தென் கொரியா அணிகளுடன் உள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா,
வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 29–18 என வெற்றி பெற்றது.
வில்வித்தையில் ஏமாற்றம்
பெண்களுக்கான வில்வித்தை ‘ரிகர்வ்’ பிரிவு 3வது இடத்துக்கான போட்டியில்,
இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, பம்பைலா
தேவி, லட்சுமிராணி பங்கேற்றனர். முடிவில் இரு அணிகளும் 217 புள்ளிகளுடன்
சமநிலை வகிக்க, போட்டியின் முடிவு ‘ஷூட்–ஆப்’ முறைக்கு சென்றது. இதில்
இந்திய அணி 26–27 என தோல்வி அடைந்து, வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
வாலிபால்: இந்தியா தோல்வி
ஆண்களுக்கான வாலிபால் ‘பிளே–ஆப்’ சுற்றின் முதல் போட்டியில், இந்தியா,
தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3–0 (22–25, 25–27, 18–25)
என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இன்று நடக்கும் மற்றொரு போட்டியில்,
இந்தியா–கத்தார் அணிகள் மோதுகின்றன.
ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்
ஆண்களுக்கான ஹேண்ட்பால் 13–14வது இடத்துக்கான போட்டியில், இந்தியா,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 25–32 என்ற கணக்கில்
தோல்வி அடைந்து, 14வது இடம் பிடித்தது.
* பெண்களுக்கான 5–8வது இடத்துக்கான போட்டியில், இந்தியா, உஸ்பெகிஸ்தான்
அணிகள் மோதின. இதில் இந்திய அணி 26–44 என தோல்வி அடைந்தது. இதனையடுத்து
7–8வது இடத்துக்கான போட்யில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
கூடைப்பந்து: இந்தியா தோல்வி
பெண்களுக்கான கூடைப்பந்து காலிறுதியில், இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 37–70 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
ஹாக்கி: இந்தியா–தென் கொரியா மோதல்
பெண்களுக்கான ஹாக்கி அரையிறுதியில், இந்தியா, தென் கொரியா அணிகள் இன்று
மோதுகின்றன. லீக் போட்டியில் தாய்லாந்து, மலேசியா அணிகளை வீழ்த்திய
உற்சாகத்தில் இந்திய வீராங்கனைகள் உள்ளனர். கடந்த 2006ல் தோகாவில் நடந்த
ஆசிய விளையாட்டில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி 1–0 என
தென் கொரியாவை வீழ்த்தியது. கடந்த 2010ல் குவான்சுவில் நடந்த ஆசிய
விளையாட்டில் இந்திய அணி 0–1 என தென் கொரியாவிடம் வீழ்ந்தது. இத்தோல்விக்கு
நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி
ஆண்கள் அணிகளுக்கான டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில், சரத் கமல்,
சவுமியாஜித் கோஷ், ஹர்மீத் ராஜுல், சனில் ஷெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய
அணி 0–3 என தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது. அடுத்து நடந்த காலிறுதியில்
இந்திய அணி 0–3 என சீனாவிடம் வீழ்ந்தது.
* பெண்கள் அணிகளுக்கான லீக் போட்டியில், அன்கிதா தாஸ், நேஹா அகர்வால்,
மாதுரிகா பட்கர், மணிகா பத்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, லீக் போட்டியில்
0–3 என சீனாவிடம் வீழ்ந்தது. அடுத்து நடந்த காலிறுதியில் 0–3 என
சிங்கப்பூரிடம் தோல்வி அடைந்தது.
பதக்கத்தில் மாற்றமில்லை
பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபில்சேஸ்’ ஓட்டத்தில், பக்ரைனின் ருத்
ஜெபட் முதலிடம் பிடித்தார். கடைசி நேரத்தில் ஒரு காலை ‘டிராக்கிற்கு’
வெளியில் வைத்து விட்டு, பின் சுதாரித்து உள்ளே வந்து ஓடினார். இதற்கு
இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க, பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின்
போது இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து
இவருக்கு அடுத்த மூன்று இடங்களில் வந்த சீனாவின் லி ஜென்ஜு(தங்கம்),
இந்தியாவின் லலிதா(வெள்ளி), சுதாசிங்(வெண்கலம்) ஆகியோர் முதல் மூன்று
இடங்களை பிடித்ததாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு பக்ரைன் சார்பில் மறுப்பு
தெரிவிக்கப்பட்டு அப்பீல் செய்யப்பட்டது. இதுகுறித்து மூன்று பேர் கொண்டு
குழு விசாரணை செய்வதால், பக்ரைன் வீராங்கனைக்கு வழங்கப்பட்ட தங்கத்தில்
எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
எட்டு பதக்கம்
ஆசிய விளையாட்டில், நேற்று இந்தியாவுக்கு 8 பதக்கங்கள் கிடைத்தன. இதில்
ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஆறு வெண்கலம் அடங்கும். அதிகபட்சமாக தடகளத்தில்
ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட 4 பதக்கங்கள் கிடைத்தன. டென்னிஸ்
போட்டியில் மூன்று வெண்கலம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு தங்கம்
கிடைத்தது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்திய அணி 9வது இடத்துக்கு
முன்னேறியது.
யூகி பாம்ப்ரி வெண்கலம்
ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் யூகி
பாம்ப்ரி 6–3, 2–6, 1–6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிடோ
நிஷியோகாவிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை உறுதி
செய்தார்.
* இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, திவிஜ்
சரண் ஜோடி 7–6, 6–7, 9–11 என்ற செட் கணக்கில், தென் கொரியாவின் லிம், சுங்
ஜோடியிடம் தோல்வி அடைந்து, வெண்கலம் வென்றது.
சானியா ஜோடி வெண்கலம்
பெண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின்
சானியா மிர்சா, பிரார்தனா தாம்பரே ஜோடி 6–7, 6–2, 4–10 என்ற செட் கணக்கில்,
சீன தைபேயின் சின் வெய் சான், சு வெய் ஹசிக் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் வெண்கல பதக்கத்தை கைப்பற்றி ஆறுதல் அடைந்தது.
பைனலில் இந்திய ஜோடி
ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சனம்
சிங், சாகேத் மைனேனி ஜோடி 4–6, 6–3, 10–6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின்
சன்சாய் ரதிவதனா, சன்சாட் ரதிவதனா ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு
முன்னேறியது.
* டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சானியா
மிர்சா, சாகேத் மைனேனி ஜோடி 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில், சீனாவின் ஜி
ஜெங், ஜி ஜாங் ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. இதன்மூலம்
டென்னிஸ் போட்டியில் குறைந்தபட்சம் இரண்டு வெள்ளிப் பதக்கம் உறுதியானது.
Comments