தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை: ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா நாளை நடக்கிறது

Aayirathil oruvan 175th day celebration on tomorrow
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் மறு திரையீடு செய்யப்பட்டு அப்போதும் வெள்ளிவிழா கொண்டாடுவது இதுவே முதல் முறை. எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்து 1965ல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படம் அப்போதே வெள்ளிவிழா கொண்டாடியது. அந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார்கள். அப்போதும் வெள்ளிவிழா கண்டிருக்கிறது.சென்னை சத்யம், ஆல்பட் திரையரங்குகளில் தொடர்ந்து 175 நாட்கள் ஓடியது.


இந்த வெள்ளிவிழாவை சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் இணைந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை (செப்டம்பர் 1) மாலை 6 மணிக்கு கொண்டாடுகிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். நடிகர்கள் பாண்டியராஜன், செந்தில், மயில்சாமி, இயக்குனர்கள் பி.வாசு, விக்ரமன் முன்னிலை வகிக்கிறார்கள்.
 
விழாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பாடிய பி.சுசீலா, வசனம் எழுதிய ஆர்.கே.சண்முகம், நடித்த விஜயலட்சுமி, மாதவி, தயாரித்த பத்மினி பிக்சர்ஸ் ரவிசங்கர் ஆகியோருக்கு நினைவு கேடயம் வழங்கப்படுகிறது. படத்தின் ஹீரோயின் ஜெயலலிதா சார்பில் சரத்குமார் பெற்றுக் கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை படத்தை மறு வெளியீடு செய்த திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் செய்து வருகிறார்.

Comments