முடிந்தது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக தேர்வு : நாளை பதவி ஏற்பு

முடிந்தது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக தேர்வு?சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் 2வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது.

தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும். அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். இதனால் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை திரும்பினர். அதிமுக தலைமை நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பிக்கள், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்., அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் கூட்டம் முடிவடைந்ததும் அதிமுக எம்.எல்.ஏக்கள் குழுவினர் ஆளுநரை சந்திக்க இருக்கின்றனர். இன்றைய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் யார்? ஜெயலலிதா வழக்கு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமே 2வது முறையாக மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னரே தமிழக முதல்வர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

Comments