பிரிவினைக்கு ஸ்காட்லாந்து மக்கள் "நோ!": பிரிட்டனிலேயே நீடிக்க விருப்பம்

எடின்பர்க்; பிரிட்டன் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடிக்க ஸ்காட்லாந்து மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், 55 சதவீதம் மக்கள் பிரிட்டனில் தொடர்ந்து நீடிக்க விருப்பமும், 45 சதவீத மக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகள் இணைந்து கிரேட் பிரிட்டன் என்ற ஒரு பெயரில் கூட்டமைப்பு நாடுகளாக இருந்து வருகின்றன.
இந்த கூட்டமைப்பு கடந்த 207 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த கூட்டமைப்பில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிந்து செல்ல விரும்பியது. பிரிட்டன் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்ல வேண்டாம் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வேண்டுகோள் விடுத்தார். இங்கிலாந்து ராணியும் ஸ்காட்லாந்து பிரிவினையை விரும்பவில்லை என கூறப்படுகிறது. எனினும் ஸ்காட்லாந்து தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால், இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஓட்டெடுப்பு கடந்த 18ம் தேதி நடந்தது. 97 சதவீதம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 32 மாகாணங்களில் 30 மாகாணங்கள் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிவினைக்கு எதிராக 18 லட்சத்து 77 ஆயிரத்து 252 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது மொத்த ஓட்டில் 55 சதவீதமாகும். பிரிவினைக்கு ஆதரவாக 15 லட்சத்து 12 ஆயிரத்து 688 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இது 45 சதவீதமாகும். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ, டன்டீ, மேற்கு டன்பர்டன்ஷையர் மற்றும் வடக்கு லானர்க்ஷயர் ஆகிய நகரங்களில் பிரிவினைக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் பிரிவினைக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

முடிவுகள் குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முடிவுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. யுனைடெட் கிங்டம் முடிவுக்கு வந்ததை பார்க்க நேரிட்டால் எனது மனம் நொறுங்கியிருக்கும். பிரிட்டனின் இதர நாடுகளில் உள்ள மக்களின் உரிமைகளை நாம் மதிக்க வேண்டும். அதை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒருங்கிணைந்த பிரிட்டனுக்காக குரல் கொடுத்த அலிஸ்டர் டார்லிங்கிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கேமரூன் தெரிவித்தார்.

அதே சமயம், வாக்கெடுப்பு முடிவுகள், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாக மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக, ஸ்காட்லாந்து துணை பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியான் தெரிவித்துள்ளார்.

Comments