புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த வளர்ச்சி முடக்கத்திற்கு
தற்போதைய மோடி ஆட்சியில் முடிவு கிடைத்திருக்கிறது,' என்று, ஆம் ஆத்மியின்
முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் கூறி உள்ளார். பிரதமர்
நரேந்திரமோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மியின்
ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வரும் நிலையில், குமாரின் இந்த
பாராட்டு அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 22 மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அன்னா ஹசாரேவின் பட்டறையில் இருந்து வௌிவந்து அன்னாவின் கொள்கைகளுக்கு எதிராக ஆம் ஆத்மியை துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் அரசியலில் களம் இறங்கிய இந்த கட்சிக்கு டில்லி மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தார்கள். டில்லி சட்டசபை தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக, 49 நாட்களில் டில்லியின் ஆட்சி பொறுப்பில் இருந்து அக்கட்சி விலகியது. இது, டில்லி வாசிகளை அதிருப்திக்குள்ளாகியது.
கட்சியுடன் கருத்து வேறுபாடு:
லோக்சபா தேர்தலில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை எதிர்த்து, ஆம்
ஆத்மியின் முக்கிய தலைவர்கள் போட்டியிட, கட்சி தலைமை ஏற்பாடு செய்தது.
இந்த வகையில் நரேந்திரமோடியை எதிர்த்து வாரணாசியில் கெஜ்ரிவாலும், ராகுலை
எதிர்த்து அமேதியில் குமார் விஸ்வாசும் போட்டியிட்டனர். தேர்தல் தேதி
அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில்
முகாமிட்டு, பிரசாரத்தை துவக்கிவிட்டார். தான் நிச்சயம் வெற்றி பெறுவேன்
என்று கூறி வந்த அவர், தோற்றுவிட்டார். அமேதி தொகுதியில் கெஜ்ரிவால்
பிரசாரம் செய்வது குறித்து கட்சிக்கும், குமார் விஸ்வாசுக்கும் இடையில்
கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குமார் விஸ்வாஸ் பல முறை கட்சி தலைமையுடன்
மோதினார்.
எனக்கும் மோடி தான் பிரதமர்:
இந்நிலையில்
அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'காங்கிரஸ்
ஆட்சியில் வளர்ச்சி என்பது நொண்டியடித்துக் கொண்டிருந்தது. வளர்ச்சி
முடக்கி வைக்கப்பட்டது. பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்ற பின்னர், அந்த
நிலை மாறி உள்ளது. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் மோடி எனக்கும் பிரதமர் தான்,
அவர் நல்ல காரியங்களை செய்தால் பாராட்டுவேன். தவறாக இருந்தால் விமர்சனம்
செய்வேன். மோடி எதைச் செய்தாலும் குறை கூறுவது என்ற ஆம் ஆத்மியின் கொள்கையை
ஏற்றுக் கொள்ள முடியாது,' என்றார்.
மோடியின் பிறந்தநாளில் பங்கேற்பு:
பிரதமர்
மோடியின் பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி குஜராத்தில் நடக்க உள்ளது.
இதில், குமார் விஸ்வாஸ் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், அரவிந்த்
கெஜ்ரிவால் அவரை சந்தித்து பேசினார். இதையடுத்து, மோடியின் பிறந்த நாள்
விழாவில் கலந்து கொள்வதை குமார் விஸ்வாஸ் தவிர்ப்பார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'நான் நிச்சயம் மோடியின் பிறந்தநாள் விழாவில்
கலந்து கொள்வேன். அதற்காக, என்னை கட்சியில் இருந்து வெளியேற்றினாலும்
பரவாயில்லை' என்று கூறிவிட்டார்.
பா,.ஜ.,வில் ஐக்கியம்?:
பிரதமர்
மோடியை குமார் விஸ்வாஸ் புகழ்ந்து தள்ளியுள்ளதால் அவர் விரைவில்
பா.ஜ.,வில் இணைய போகிறார் என தகவல்கள் வௌியாகி உள்ளன. ஆனால், குமார்
விஸ்வாஸ் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'நான் இப்போதும் ஆம் ஆத்மியில்
தான் இருக்கிறேன். என்றைக்கு அந்த கட்சி, அதன் கொள்கைகளில் இருந்து விலகி,
சாதாரண அரசியல் கட்சி போல செயல்படுகிறதோ, அன்றே அரசியலுக்கு முழுக்கு
போட்டுவிடுவேன்,' என்று கூறி உள்ளார்.
தனிக்கட்சி துவக்குகிறார் குமார் விஸ்வாஸ்?
ஆம் ஆத்மியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை துவக்க குமார் விஸ்வாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேட்டியளித்திருந்தார். மேலும், ஆம் ஆத்மி சாதாரண கட்சியாக செயல்பட்டால் அக்கட்சியிலிருந்து விலகிவிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மியிலிருந்து விலகி குமார் விஸ்வாஸ் தனிக்கட்சி துவங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு 8 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 2 எம்.பி.,க்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை குமார் பிஸ்வாஸ் கட்சி துவங்கினால், அவர் டில்லியில் பா.ஜ., ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆம் ஆத்மியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை துவக்க குமார் விஸ்வாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேட்டியளித்திருந்தார். மேலும், ஆம் ஆத்மி சாதாரண கட்சியாக செயல்பட்டால் அக்கட்சியிலிருந்து விலகிவிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மியிலிருந்து விலகி குமார் விஸ்வாஸ் தனிக்கட்சி துவங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு 8 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 2 எம்.பி.,க்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை குமார் பிஸ்வாஸ் கட்சி துவங்கினால், அவர் டில்லியில் பா.ஜ., ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Comments