ஜித்து சுட்டார் முதல் தங்கம்: வெண்கலம் கைப்பற்றினார் சுவேதா

jitu rai, asian gamesஇன்ச்சான்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம், துப்பாக்கிசுடுதலில் கிடைத்தது. 50 மீ., ‘பிஸ்டல்’ பிரிவில், கடைசி ‘ஷாட்டில்’ அசத்திய ஜித்து ராய் தங்கம் கைப்பற்றினார். இந்திய வீராங்கனை சுவேதா சவுத்ரி, வெண்கலம் வென்றார்.

தென் கொரியாவின் இன்ச்சான் நகரில், 17வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது.
நேற்று துப்பாக்கிசுடுதல் ஆண்கள் தனிநபர் 50 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச் சுற்றில் 7வது இடம் (559 புள்ளி) பெற்று, இந்திய வீரர் ஜித்து ராய், பைனலுக்கு முன்னேறினார்.

பிற இந்திய வீரர்கள் ஓம் பிரகாஷ் (555), ஓம்கார் சிங் (551), 10, 16வது இடம் பெற்று வெளியேறினர்.

முதல் தங்கம்:

பைனலின் கடைசி வாய்ப்புக்கு முன், ஜித்து ராய் (177.8), வியட்நாம் வீரர் நிகுயனை (177.6) விட, 0.2 புள்ளிகள் மட்டும் முந்தி இருந்தார்.

கடைசி வாய்ப்பில் சிறப்பாக ‘சுட்டால்’ தான் தங்கம் என்ற நிலையில், நிகுயன் 5.8 புள்ளி  பெற்றார். ஜித்து ராய் 8.4 புள்ளி பெற, ஒட்டுமொத்தமாக 186.2 புள்ளிகள் பெற்று, தங்கத்தை தட்டிச் சென்றார்.

இதையடுத்து, 17வது ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.  வியட்நாமின் நுகுயனுக்கு (183.4) வெள்ளி கிடைத்தது. சீன வீரர் ஜிவெய் வாங் (165.6), வெண்கலம் பெற்றார்.
 
நான்காவது வீரர்

ஆசிய விளையாட்டு ‘பிஸ்டல்’ பிரிவில் ஜஸ்பால் ராணாவுக்கு (1994, 25 மீ., ‘சென்டர் பயர் பிஸ்டல்’) பின், தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் ஜித்து ராய்.

தவிர, ரந்திர் சிங் (1978), ஜஸ்பால் ராணா (1994, 2006), ரஞ்சன் சோதிக்குப் பின் (2010) ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற 4வது இந்திய வீரர் ஆனார்.

சுவேதா முதல் பதக்கம்:

பெண்கள் தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் சுவேதா சவுத்ரி, தகுதிச் சுற்றில், 383 புள்ளிகளுடன் 4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

சக வீராங்கனைகள் ஹீனா சித்து (378) 13வது, மலைக்கா கோயல் (373) 24வது இடம் பெற்று திரும்பினர்.

அடுத்து நடந்த பைனலில், துவக்கத்தில் முன்னிலை வகித்த சுவேதா, பின் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடைசியில் சுதாரித்துக் கொண்ட சவுத்ரி, 3 வது இடம் (176.4) பிடித்து வெண்கலம் வென்றார். 17வது ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவர் தான். 

நான்காவது இடம்:

ஆண்கள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., ‘பிஸ்டல்’ பிரிவில், இந்தியாவின் ஜித்து ராய், ஓம் பிரகாஷ், ஓம்கார் சிங் அடங்கிய அணி 1665 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது.

தீபிகா–ஜோஷ்னா மோதல்

பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், இந்தியாவின் தீபிகா பல்லீகல் 2–1 (11–6, 10–12, 11–6) என்ற கணக்கில் சீனாவின் கு ஜியுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 3–0 (11–9, 11–7, 11–7) என்ற கணக்கில் தென் கொரியாவின் சாங் சன்மியை தோற்கடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடக்கும் காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் இருவரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். யார் வீழ்ந்தாலும், ஒருவர் அரையிறுதிக்கு செல்லலாம். இதனால், எப்படியும் வெண்கலம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

டென்னிஸ்: பெண்கள் அணி வெற்றி

பெண்கள் டென்னிசிஸ் முதல் சுற்றில், இந்திய அணி, ஓமனை 3–0 என வீழ்த்தியது. இந்தியா சார்பில், ஒற்றையரில் பிரார்த்தனா, அன்கிதா ரெய்னா வெற்றி பெற்றனர். இரட்டையரில் ரிஷிகா, நடாஷா ஜோடி வென்றது.

பாட்மின்டன்: அரையிறுதியில் இந்தியா

பெண்கள் பாட்மின்டன் ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியா, மக்காவு அணியை 3–0 என, வென்றது. காலிறுதியில் இந்தியா, தாய்லாந்தை சந்தித்தது.
இதன் முதல் இரு ஒற்றையர் போட்டிகளில் செய்னா நேவல், சிந்து வெற்றி பெற்றனர். மூன்றாவது ஒற்றையரில் இந்தியாவின் துளசி வீழ்ந்தார். பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் பிரத்னயா, சிக்கி ரெட்டி ஜோடி தோற்க 2–2 என, சமன் ஆனது.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிந்து ஜோடி வெற்றி பெற்றது. முடிவில் 3–2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனால், இந்திய பெண்கள் அணிக்கு, வெண்கல பதக்கம் கிடைப்பது உறுதியானது. இதையடுத்து, கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின், ஆசிய பாட்மின்டனில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவுள்ளது.

* ஆண்கள் ‘ரவுண்ட்–16’ போட்டியில், இந்திய அணி, தென் கொரியாவிடம் 0–3 என, வீழ்ந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய ஸ்ரீகாந்த், காஷ்யப், சுமீத் ரெட்டி–மானு அட்ரி ஜோடி வீழ்ந்தது.

வாலிபால்: இந்தியா அபாரம்

வாலிபால் லீக் போட்டியில், இந்திய ஆண்கள் அணி, ஹாங்காங்கை 25–18, 25–16, 25–21 என (3–1) வென்றது. இந்திய பெண்கள் அணி, தென் கொரியாவிடம்  0–3 (5–25, 12–25, 13–25) என, வீழ்ந்தது.

கூடைப்பந்தில் அசத்தல்

ஆண்களுக்கான கூடைப்பந்து லீக் போட்டியில், இந்தியா, பாலஸ்தீனம் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 89–49 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.

ஹேண்ட்பால்: சொதப்பல் துவக்கம்

ஆண்களுக்கான ‘ஹேண்ட்பால்’ லீக் போட்டியில், இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. இதில் இந்திய அணி 20–39 என்ற கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றியது. இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவை சந்திக்கிறது.

ஜூடோ: கல்பனா ஏமாற்றம்

பெண்கள் 52 கி.கி., பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், இந்தியாவின் கல்பனா தேவி, கஜகஸ்தானின் லெனாரியாவிடம் 0–2 என, தோல்வி அடைந்தார்.
* மற்றொரு இந்திய வீராங்கனை சுஷிலா தேவி (48 கி.கி.,) காலிறுதியில் தோற்றார்.
* இந்திய வீரர் நவ்ஜோத் சானா (60 கி.கி.,) இரண்டாவது சுற்றில் மங்கோலியாவின் கான்பட்டிடம் தோல்வி அடைந்தார்.

‘பவர் கட்’

நேற்று இந்தியா–மக்காவ், ஹாங்காங்–தைவான், இந்தோனேஷியா–மாலத்தீவு பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாட்மின்டன்  முதல் சுற்று நடந்தது. அப்போது மின்சாரம் தடைபட்டதால், ஐந்து நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.

சீனாவுக்கு பெருமை

துப்பாக்கிசுடுதல் பெண்கள் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில், ஒலிம்பிக் சாம்பியன் வென்ஜுன், ஜாங், ஜோயு அடங்கிய சீன அணி (1146) முதலிடம் பெற்றது. இதன்மூலம் 17வது ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற பெருமையை சீனா பெற்றது. சுவேதா சவுத்ரி, ஹீனா சித்து, மலைக்கா கோயல் அடங்கிய இந்திய அணி, 1134 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து ஏமாற்றியது.

 பளுதுாக்குதலில் ஏமாற்றம்

பெண்கள் 48 கி.கி., பளுதுாக்குதல் போட்டியில், சமீபத்திய காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்தியாவின் சஞ்சிதா, நேற்று 10வது இடம் பெற்று ஏமாற்றினார். மீராபாய் சானுவுக்கு 9வது இடம் கிடைத்தது.* ஆண்கள் 56 கி.கி., போட்டியில், இந்திய வீரர் சுகன் தேய், ‘ஸ்னாட்ச்’ (106), ‘கிளீன் அண்டு ஜெர்க்’ (136) பிரிவில், மொத்தம்  242 கி.கி., மட்டும் துாக்கி, 12வது இடம் பெற்றார்.

ஹாக்கி: இந்தியா–இலங்கை மோதல்

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்று தனது முதல் போட்டியில் இலங்கையை சந்திக்கிறது. 1966, 1998 ல் தங்கம் வென்ற இந்திய அணி, இதற்கு பின் ஏமாற்றி வருகிறது. இன்று இலங்கை, அடுத்து ஓமன் (செப்., 23) அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றி பெற வேண்டும். இது பாகிஸ்தான் (செப்., 27), சீனா (செப்., 27) அணிகளை சந்திக்கும் போது ஊக்கமாக செயல்பட உதவும்.

ரூ. 50 லட்சம் பரிசு

தங்கம் வென்ற துப்பாக்கிசுடுதல் வீரர் ஜித்து ராய்க்கு, உ.பி., அரசு ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்தது. முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,‘‘ திறமை, கடின முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றி, இந்திய இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை அடைய, துாண்டுகோலாக இருக்கும்,’’ என்றார்.

Comments