துடில்லி:மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன்
பிரதமர் நரேந்திர மோடி நாளை, டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். சீன
ராணுவம் ஊடுருவல், தீர்க்கப்படாத எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சவால்கள்
நிறைந்த விஷயங்களை சீன அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
சீன அதிபர் ஜி ஜிங்பிங், தனது மனைவி மற்றும் 150 பேர் கொண்ட குழுவினருடன், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காகவும், குஜராத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வசதியாகவும் அவர் சீனாவில் இருந்து நேராடியாக ஆமதாபாத் வந்திறங்கினார். ஆமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஆனந்திபென், கவர்னர் ஓம்பிரகாஷ் கோலி ஆகியோர் ஜி ஜிங்பிங் குழுவினரை வரவேற்றனர்.
இரவு விருந்து;
பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு ஆமதாபாத் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடியை, சீன அதிபர்
ஜி ஜிங்பிங் இன்று தனியார் ஓட்டலில் சந்தித்து பேசினார். பின்னர், சீன
அதிபருக்கு மோடி, சபர்மதி நதிக்கரையில் உள்ள ஸ்விஸ் டெண்ட்டில் இரவு
விருந்து அளிக்கிறார். இதில், 150க்கும் மேற்பட்ட குஜராத்தின் பாரம்பரிய
உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. பிரதமரின் தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இரு
தரப்பிலும் மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி
ஜிங்பிங் ஆகியோர் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சவாலான விஷயங்கள்:
இந்தியா, சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவுகிறது. அருணாசல பிரதேசம், காஷ்மீர் எல்லை பிரச்னைகள் பெரிய அளவில் இரு நாட்டு உறவுகளில் பிளவை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், இந்திய பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி முகாமிட்டுள்ளது எல்லை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சீன ராணுவத்தினருடன் நடத்திய முதற்சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு இந்திய ராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். எல்லை பிரச்னையை சீன அதிபருடன் பேசி எப்படி மோடி சமாளிக்க போகிறார், தீர்வு காண உள்ளார் என்பதை இந்திய தலைவர்கள் மட்டுமன்றி, அண்டை நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
கட்டமைப்பு, தொழில்நுட்பம்:
இந்தியாவில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ரயில் போக்குவரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தவும் ஜப்பான் நாடு 2 லட்சம் கோடி ரூபாய் நிதி முதலீட்டை அறிவித்துள்ளது. இந்நிலையில், இதே திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவும் முன் வந்துள்ள நிலையில், அது குறித்தும் மோடி, ஜி ஜிங்பிங் பேச்சுவார்த்தையின் போது முடிவு காணப்படும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்திய, சீன நாடுகளுக்கு இடையோன வர்த்தகம், ராஜீய உறவுகள் குறித்து புதிய ஒப்பந்தங்கள் டில்லியில் கையெழுத்தாக உள்ளதாகவும் டில்லி தகவல்கள் கூறுகின்றன.
Comments