மாஜி' அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் கைது ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலையில் திருப்பம்

மதுரை: மதுரை ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஜமால்முகமது,61, சொத்துக்காக கடத்தப்பட்டு செப்.,2ல் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், சொத்து வாங்கிய தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, 36, உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.


மதுரை சொக்கிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜமால்முகமது. 'மதுரை அலாவுதீன் ராவுத்தர் டிரஸ்ட்' நிர்வாகியாக இருந்தார். இந்த டிரஸ்டிற்கு மதுரை புதுஜெயில் ரோடு அருகே ஒரு ஏக்கர் 64 சென்ட் காலியிடம் உட்பட பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில், புதுஜெயில் ரோடு முரட்டன்பத்திரியைச் சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து டிரஸ்ட் இடங்களுக்கு பட்டா பெற்றனர்; இதுகுறித்து ஆர்.டி.ஓ., கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து. அவை ரத்து செய்யப்பட்டன.
 
மாயம்:

இந்நிலையில், ஆக.,31ல் ஜமால்முகமது வீடு திரும்பவில்லை. ஆனால் செப்.,1 வரை மனைவியிடம் மொபைல் போனில் பேசினார். பின் செப்.,2 இரவு மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. அவர் மாயமானதாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்த நிலையில், சங்கர் என்பவர் மேலூர் கோர்ட்டில் சரணடைந்தார். ஜமால்முகமது கடத்தப்பட்டு கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் உடல் மீட்கப்பட்டது.

பெண் கைது: கொலைக்கு உடந்தையாக இருந்த திருப்பரங்குன்றம் பூங்கொடி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் இடபுரோக்கர் கூடல்புதூர் சித்திக் உட்பட சிலர் சரணடைந்தனர். சொத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.இதற்கிடையே, கலெக்டர் சுப்ரமணியத்திடம் ஜமால்முகமது உறவினர்கள் கொடுத்த மனுவில், 'போலி ஆவணங்கள் மூலம் டிரஸ்ட் சொத்துக்களை அவர்கள் அபகரித்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். புதுஜெயில் ரோடு பகுதியில் உள்ள இடம் போலி 'பவர் பத்திரம்' பெற்ற கணேசன் என்பவர் மூலம் இந்திரா, பழனிவேலு, 55, உமாராணி,43, ஆகியோருக்கு விற்கப்பட்டுள்ளது. இது, ஜமால்முகமது கடத்தப்பட்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்' என ெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திரா, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள். இவரின் சித்தி உமாராணி. கொலை மற்றும் சொத்து வாங்கியது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளவரசு நேற்று விசாரித்தார்.மோசடி செய்து, ஜமால்முகமதுவை மிரட்டி சொத்து வாங்கியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

'அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா

இந்திரா கைது செய்யப்படுவதை அறிந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஸ்டேஷன் முன் குவிந்தனர். இந்திராவையும், உமாராணியையும் பத்திரிகையாளர்கள் படம் எடுக்கக்கூடாது என்பதற்காக கேமரா முன் துண்டை உயர்த்தி பிடித்தனர். போலீஸ் வேனில் கண்ணாடிகளை இறக்குமாறு கூறினர். அதையும் மீறி படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களுக்கு, 'நீங்க எல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா' என சாபம் விட்டனர் தி.மு.க., வினர்.

Comments