ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு

புதுடில்லி: 'ஊழல் உட்பட, குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, 2013 ஜூலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து, பல அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.
இந்த விவகாரத்தில், எம்.பி.,க்களை காப்பாற்ற, சட்டத் திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தின. அதனால், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், 'குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை, உடனே பறிக்க வேண்டும் என்ற தீர்ப்பு சரியானதே. ஆனால், இது தொடர்பாக, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதில், நீதிமன்றம் தலையிடாது' என, தெரிவித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்றும் வகையில், சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வர, மத்திய அரசு முற்பட்டது. அந்த சட்ட திருத்தத்தின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, 90 நாட்களுக்குள், அப்பீல் மனு அல்லது மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தால், மேல் கோர்ட்டுகள், தண்டனைக்கு தடை விதித்திருந்தால், அவர்களின் பதவியை பறிக்க முடியாது.

மேலும், தண்டனை பெற்ற எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள், உயர் நீதிமன்றங்களில் அப்பீல் செய்து, அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தால், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கலாம். அதே நேரத்தில், சபையில் ஓட்டளிக்கவோ, சம்பளம் மற்றும் படிகளைப் பெறவோ, அவர்களுக்கு உரிமையில்லை என, தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை. ராகுல் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்கும். முதல்வர் ஜெயலலிதா உட்பட, இதற்கு முன் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் பதவியும் தப்பி இருக்கும்.

Comments