அமெரிக்க அதிபரின் விருந்தினர் இல்லத்தில் தங்க உள்ள மோடி

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, வரும் 29ம் தேதி, வாஷிங்டன் செல்லும் போது, அமெரிக்க அதிபரின் விருந்தினர் இல்லமான, 190 ஆண்டு பழமையான பிளேர் ஹவுசில் தங்குகிறார். வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக, பிளேர் ஹவுசில் தங்க உள்ள இந்திய பிரதமர், மோடியே.

கடந்த, 1824ம் ஆண்டு கட்டப்பட்ட பிளேர் ஹவுஸ், 190 ஆண்டுகளில், அமெரிக்காவின் அரசியல், துாதரக மற்றும் கலாசார வரலாற்றில், மிக முக்கியமான இடம் பெற்றுள்ளது.
தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மட்டுமின்றி, இதற்கு முன் இருந்த பல அதிபர்களும், முக்கியத்துவம் வாய்ந்த பல வெளியுறவு கொள்கைகளை, இந்த ஹவுசில் தான் எடுத்துள்ளனர்.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பலமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டும், ஒரு போதும் பிளேர் ஹவுசில் தங்கியதில்லை. மாறாக ஓட்டல்களிலேயே தங்கி உள்ளார். அமெரிக்க அதிபரின் அங்கீகரிக்கப்பட்ட விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுசில், பாரம்பரியமாக, அவர் விருந்தினர்கள் எல்லாம் தங்குவர். தனியொரு நபரின் வீடாக இருந்த இந்த பிளேர் ஹவுஸ், இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்க அரசால் வாங்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடையும் மோடி, அங்குள்ள பேலஸ் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள், பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மைய கட்டடங்கள் இருந்த இடத்தையும், அந்தத் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள, நினைவக அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார்.பின், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் உரை நிகழ்த்தும் மோடி, தொடர்ந்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட, சில நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். 28ம் தேதி, ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார். யூத மக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.

வரும், 29ம் தேதி, நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் செல்லும் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருந்தளிக்கிறார். அப்போது, இருவரும், முதல் முறையாக நேரடியாக பேசுகின்றனர். மறுநாள், இரு நாட்டு பிரதிநிதிகள் தலைமையிலான பேச்சு நடக்கிறது. 30ம் தேதி, அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கிறார். தொடர்ந்து, அமெரிக்க எம்.பி.,க்களையும், அமெரிக்க வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்துப் பேசுகிறார். இதன்பின், நாடு திரும்புகிறார்.

பயண திட்டத்தில் மாற்றம்: இந்நிலையில் வரும் 26ம் தேதி அமெரிக்கா செல்வதாக இருந்த பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்,26ம் தேதிக்கு பதில் ஒரு நாள் முன்னதாக 25ம் தேதியே பிரதமர் மோடி அமெரிக்கா கிளம்பி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments