டான்சி நிலபேர ஊழல் முதல் சொத்து குவிப்பு வரை... ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்

கடந்த, 1991 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று, தமிழக முதல்வராக ஜெயலலிதா, முதல் முறையாக பொறுப் பேற்றார். 1991 - 96 ஆட்சியில், பொது மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியே, 1996ல், அ.தி.மு.க., ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. அடுத்ததாக தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், ஜெயலலிதா தான்' என்றார்.
கடந்த, 1996ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மீதும், அவரது ஆட்சியில் பதவி வகித்த அமைச்சர்கள் மீதும், 46 வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு எதிராக, 14 வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில், பலவற்றில் ஜெயலலிதா விடுதலை பெற்றாலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளின் விவரம்:

டான்சி நிலபேர ஊழல்:

'டான்சி' நிறுவன நிலத்தை, ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இந்த நிலபேர ஊழல் வழக்கில், 2009 அக்டோபர், 9ல் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பு அளித்தார். அதில், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்த உத்தரவு தான், முதன் முதலில், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு, பலத்த அடியை கொடுத்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார்.இருந்தும், 2001ல் நடந்த, சட்டசபை தேர்தலில், ஆண்டிபட்டி உட்பட, நான்கு தொகுதிகளில் போட்டியிட, ஜெ., வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால், அந்த வேட்புமனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டன. ஆனாலும், அவரது தலைமையிலான, அ.தி.மு.க., 140 இடங்களில் போட்டியிட்டு, 132 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலை சந்திக்காத ஜெயலலிதாவை, முதல்வராக அவரது கட்சி தேர்வு செய்தது. அவரும், 2001 மே, 14ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.ஆனால், ஜெ., முதல்வராக நியமனம் பெற்றதை, 2001, செப்டம்பரில், உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே, முதல்வராக இருந்த அவர் பதவி விலகி, நிதி அமைச்சராக இருந்த, ஓ.பன்னீச்செல்வத்தை முதல்வராக்கினார்.பின், டான்சி நிலபேர ஊழல் வழக்கில், ஜெயலலிதாவை, சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது. அந்தத் தீர்ப்பை, 2003ல், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கிடையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
கலர் டிவி ஊழல்:

இதேபோல், 1996ல், முதல்வர் பதவியிலிருந்து இறங்கியதும், கலர் 'டிவி' ஊழல் வழக்கில் கைதான ஜெயலலிதாவை, 2000 மே, 30ம் தேதி, சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த விடுதலையை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவும், 2009 ஆகஸ்ட், 21ல் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது.
நிலக்கரி இறக்குமதி முறைகேடு:

அதேபோன்று, நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கிலும், 1999ல், ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலையை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.இந்த விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது, ஜெயலலிதாவை விடுவித்ததை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்த உத்தரவிட்டனர். மீண்டும் நடைபெற்ற விசாரணையில், 2001, டிசம்பர், 27ல், ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் மறுபடியும் விடுவித்தது.
ஸ்பிக் நிறுவன பங்குகள் விற்பனை:

ரூபாய், 28.28 கோடி, ஸ்பிக் நிறுவன பங்குகள் விற்பனை வழக்கிலும், சிறப்பு நீதிமன்றத்தால், 2004, ஜனவரி, 23ல், ஜெயலலிதா விடுதலையானார்.
பிளசன்ட்டே ஓட்டல்:

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, கொடைக்கானல், 'பிளசன்ட்டே ஓட்டல்' வழக்கு. சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானலில், அரசு விதிமுறைகளை மீறி, ஓட்டல் கட்ட அனுமதி வழங்கியதாக, இந்த வழக்குத் தொடரப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எதிராக, இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ், தொடரப்பட்ட இந்த வழக்கில், 2000 பிப்ரவரி, 2ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், ஜெயலலிதாவுக்கு, தனித்தனியாக, இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்த உத்தரவின் எதிரொலியாக தான், தமிழகத்தில் பல இடங்களில், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தர்மபுரி அருகில், வேளாண் பல்கலைகழக மாணவியர் வந்த பஸ்சை, அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர். இதில், மாணவியர் மூவர் பலியாகினர். பின், இந்த வழக்கில், 2001 டிசம்பர், 4ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தால், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
பிறந்த நாள் பரிசு:

மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் பிறந்த நாள் பரிசு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை, 2011 செப்டம்பர், 30ல், சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கணக்குகள் தாக்கல் செய்யாதது:

வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யாதது தொடர்பாக, ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், சென்னை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்னும் நடந்து வருகிறது.
அதிகமாக சொத்து குவிப்பு:

இதுதவிர, வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்தது தொடர்பாக, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தான், பெங்களூரு தனி நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், ஜெயலலிதாவும், மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தான், கிட்டத்தட்ட, 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. பல்வேறு கட்டங்களை தாண்டி, தற்போது தான் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

Comments