தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின்தடை அறிவிப்பு

காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு, மீண்டும், 20 சதவீதம் மின்தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியைக் காட்டிலும், அதிகமாக உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, 2008 நவம்பர் முதல், மின்தடை அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில், சென்னையில் இரண்டு மணி நேரம்; மற்ற பகுதிகளுக்கு, நான்கு மணி நேரம், மின்தடை செய்யப்பட்டது.


ஜூனில் நீங்கிய தடை:

தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு, 40 சதவீத மின்தடை; 'பீக் அவர்' எனப்படும், மின் தேவை அதிகம் உள்ள, மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, 90 சதவீத மின்தடை செய்யப்பட்டது.இந்த சூழ்நிலையில், புதிதாக, மேட்டூர் விரிவாக்கம், 600; வட சென்னை விரிவாக்கம், 1,200; வல்லுார் (இரண்டாவது அலகு), 500 மெகாவாட் என, மூன்று புதிய அனல்மின் நிலையங்களில், மின் உற்பத்தி துவக்கப்பட்டு உள்ளது.இவற்றின், மொத்த மின் உற்பத்தித்திறன், 2,300 மெகாவாட் என்றாலும், நாள்தோறும், சராசரியாக, 1,800 மெகாவாட், மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலை சீசன் துவங்கிய தால், கடந்த ஏப்ரல் முதல், காற்றாலைகள் மூலம், நாள்தோறும், 2,000 - 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.இதையடுத்து, கடந்த மே மாதம், 27ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமிழகத்தில், இதுவரை நடைமுறையில் உள்ள, மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும், ஜூன் 1ம் தேதி முதல், அறவே நீக்க, நான் உத்தரவிட்டு உள்ளேன்.

இதன்படி, தற்போது, உயரழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு, மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, நடைமுறையில் உள்ள, 90 சதவீத மின் கட்டுப்பாடு, ஜூன் முதல் நீக்கப்படும்.

உயரழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு, மற்ற நேரங்களில், தற்போது நடைமுறையில் உள்ள, 20 சதவீத மின் கட்டுப்பாடும், ஜூன் முதல் நீக்கப்படும்.இதன் மூலம், 2008 நவம்பர் முதல் அமல்படுத்தப்பட்ட, மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தும், முற்றிலும் நீக்கப்படும் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு, முதல்வர் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
ஒப்புக்கொண்ட ஜெ.,:

இதையடுத்து, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு, தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. காற்றாலைகளில், 200 மெகாவாட்டிற்கு கீழ், மின்சாரம் உற்பத்தியாகும் போது, மின்தடை செய்யப்பட்டது.சில தினங்களுக்கு, கோவையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, 'கடந்த 106 நாட்களில், 97 நாட்கள், மின்தடை ஏதுமின்றி, தமிழகம் முழுவதும், மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது' என, தெரிவித்தார். எஞ்சிய 11 நாட்கள், மின்தடை அமல்படுத்தப்பட்டதை, அவர் ஒப்புக் கொண்டார். இந்நிலையில், காற்றாலை சீசன், இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், அடுத்த மாதம் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு, மீண்டும் மின்தடை செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு, 20 சதவீத மின்தடை; மாலை 6:00 மணி முதல், 10:00 மணி வரை, 90 சதவீத மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.இது, நேற்று (23ம் தேதி) முதல், அமலக்கு வருவதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதன் மூலம், 'ஜூன் முதல், மின்தடை ரத்து செய்யப்படும்' என்ற அரசின் உத்தரவு, மூன்று மாதங்களில், புஸ்வாணம் ஆகியது, தொழிற்துறையினரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பின்பற்றப்படாத நடைமுறை:

இதுகுறித்து, தொழிற்துறையினர் கூறியதாவது:

கடந்த 2008ல், மின்தடை அமல்படுத்தப்பட முடிவு செய்த போது, மின் வாரிய அதிகாரிகள், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், முறைப்படி அனுமதி பெற்று, மின் நுகர்வோரிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில், மின்தடையை அமல்படுத்தினர். இது, கடந்த ஜூன் முதல், ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது புதிதாக, மின்தடை அமல்படுத்தும் போது, கடந்த முறை பின்பற்றிய நடைமுறைகளை, மின் வாரிய அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தென் மாவட்டங்களில்...:

தென் மாவட்டங்களில், குடியிருப்புகளுக்கும், பல மணி நேரம் மின்தடை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மின்சாரம், குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கவில்லை.எனவே, தமிழக அரசிடம் அனுமதி பெற்ற பின்தான், தொழிற்துறைக்கு, 20 சதவீத மின்தடை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மிச்சமாகும், 500 - 700 மெகாவாட் மின்சாரம், குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments