தென் கொரியாவில் உள்ள இன்ச்சானில் 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது.
நேற்று நடந்த அணிகளுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’
போட்டியில் இந்தியாவின் ஜித்து ராய் 585 புள்ளிகள் பெற்றார்.
சமரேஷ் ஜங்
(580 புள்ளி) பிரகாஷ் நஞ்சப்பா (578 புள்ளி) கைகொடுக்க, ஒட்டுமொத்தமாக 1743
புள்ளிகளுடன் (585+580+578) 2வது இடத்தை சீனாவுடன் பகிர்ந்து கொண்டது.
பின், ‘டை–பிரேக்கர்’ மூலம் 2வது இடம் முடிவு செய்யப்பட்டது. இதில் சீனா
65, இந்தியா 64 புள்ளிகள் பெற்றன. இதனையடுத்து சீனாவுக்கு வெள்ளியும்,
இந்தியாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.
இதன்மூலம் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்
கிடைத்தது. முன்னதாக ஆண்களுக்கான 50 மீ., ‘பிஸ்டல்’ தனிநபர் பிரிவில்
ஜித்து ராய் தங்கம், பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில்
சுவேதா சவுத்தரி வெண்கலம் வென்றனர்.
ஜித்து ராய் ஏமாற்றம்: தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’
பிரிவு பைனலில், இந்தியாவின் ஜித்து ராய் துவக்கத்தில் முன்னிலை வகித்தார்.
பின், 11வது ‘ஷாட்டில்’ 7.8 புள்ளிகள் பெற்று பின்தங்கினார். முடிவில்,
138.3 புள்ளிகள் பெற்ற ஜித்து ராய் 5வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும்
வாய்ப்பை இழந்தார்.
பாட்மின்டனில் பதக்கம்: பெண்கள் அணிகளுக்கு இடையிலான
பாட்மின்டன் அரையிறுதியில், இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில்
இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, வெண்கலம் பெற்றது. இந்தியா
சார்பில் ஒற்றையரில் செய்னா நேவல் மட்டும் வென்றார். மற்ற இந்திய
வீராங்கனைகளான சிந்து (ஒற்றையர்), துளசி (ஒற்றையர்), சிகி ரெட்டி,
பிராத்னியா ஜோடி (இரட்டையர்) தோல்வி அடைந்தனர். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு
பின், ஆசிய விளையாட்டு பாட்மின்டனில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக 1986ல் பிரகாஷ் படுகோனே, விமல் குமார் உள்ளிட்டோர் அடங்கிய
இந்திய அணி வெண்கலம் வென்றது.
ஜோஷ்னாவை வென்ற தீபிகா
பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா
பல்லீகல், சக வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான
நடந்த இப்போட்டியில் தீபிகா பல்லீகல் 3–2 (7–11, 11–9, 11–8, 15–17, 11–9)
என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சவுரவ் கோசால், பாகிஸ்தானின்
இக்பால் நசியை 3–1 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
தீபிகா பல்லீகல், சவுரவ் கோசால் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம்
ஸ்குவாஷ் பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு வெண்கலப்பதக்கம் உறுதியானது.
இதன்மூலம் ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல்
இந்திய வீராங்கனை என்ற பெருமையை பல்லீகல் பெற இருக்கிறார்.
காலிறுதியில் இந்தியா
ஆண்கள் அணிகளுக்கு இடையிலான டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய அணி,
நேபாளத்தை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய அணி 3–0 என்ற கணக்கில் வென்று,
காலிறுதிக்கு முன்னேறியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சனம் சிங், யூகி
பாம்ப்ரி வென்றனர். இரட்டையரில் திவிஜ் சரண், சாகித் மைனேனி ஜோடி வெற்றி
பெற்றது. அரையிறுதியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கூடைப்பந்தில் ஏமாற்றம்
ஆண்களுக்கான கூடைப்பந்து முதல் லீக் போட்டியில் பாலஸ்தீனத்தை வீழ்த்திய
இந்திய அணி, நேற்று நடந்த 2வது லீக் போட்டியில் சவுதி அரேபியாவை
சந்தித்தது. இதில் இந்திய அணி 67–73 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
ஹேண்ட்பால்: மீண்டும் தோல்வி
ஆண்களுக்கான ஹேண்ட்பால் லீக் போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவிடம் 19–39 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
* பெண்கள் பிரிவில் இந்தியா– தாய்லாந்து மோதிய பரபரப்பான 2வது லீக் போட்டி 26–26 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.
சைக்கிள் பந்தயத்தில் சொதப்பல்
பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தின் தனிநபர் ‘கெய்ரின் டிராக்’ பிரிவில்,
இந்தியா சார்பில் தேப்ரோ, மோகன் மகிதா பங்கேற்றனர். தங்களது
தகுதிச்சுற்றில் 5வது இடம் பிடித்த இவர்கள், பதக்க வாய்ப்பை இழந்தனர்.
நீச்சலில் பின்னடைவு
ஆண்களுக்கான 200 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில், பந்தய துாரத்தை ஒரு
நிமிடம், 53.33 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சவுரப் சங்வேகர், 5வது இடம்
பிடித்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
* ஆண்களுக்கான 100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ பிரிவில், பந்தய துாரத்தை 57.81
வினாடிகளில் கடந்த இந்திய வீரர் மது, 7வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை
கோட்டைவிட்டார்.
* ஆண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவில், பந்தய துாரத்தை 2
நிமிடம், 04.74 வினாடிகளில் கடந்த இந்தியாவின் ஆரோன் டிசவுசா 4வது இடம்
பிடித்தார். இதன்மூலம் மாற்று வீரராக தகுதி பெற்ற இவருக்கு பைனலில்
விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கால்பந்து: இந்தியா தோல்வி
பெண்களுக்கான கால்பந்து, 2வது லீக் போட்டியில் இந்திய அணி, தாய்லாந்திடம் 0–10 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.
கால்பந்து:
இந்தியா–ஜோர்டான் மோதல்
ஆண்களுக்கான கால்பந்து முதல் லீக் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணி, இன்று நடக்கும் இரண்டாவது லீக்
போட்டியில் ஜோர்டானை சந்திக்கிறது. இதில் நிறைய கோல் வித்தியாசத்தில்
வெற்றி பெறும் பட்சத்தில், ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறலாம்.
படகு வலித்தல்: பைனலில் இந்தியா அணி
ஆண்களுக்கான 8 பேர் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான படகு வலித்தல்
தகுதிச் சுற்றுப் போட்டியில், கபில் சர்மா, ரஞ்சித் சிங், பஜ்ரங் லால்,
ராபின், சவான் குமார், ஆசாத் முகமது, மனிந்தர் சிங், தேவிந்தர் சிங், அகமது
முகமது ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய துாரத்தை 5 நிமிடம்,
53.58 வினாடிகளில் கடந்த இந்திய அணி, 2வது இடம் பிடித்து பைனலுக்கு
முன்னேறியது. முதலிடத்தை சீன அணி (5 நிமிடம், 46.01 வினாடி) பிடித்தது.
* ஆண்கள் இரட்டையர் ‘ஸ்கல்ஸ்’ பிரிவு படகு வலித்தலுக்கான தகுதிச்
சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் ஓம் பிரகாஷ், பாபன் ஜோடி, 3வது இடம்
பிடித்து, ‘ரெபேஜஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
* ஆண்கள் ஒற்றையர் ‘ஸ்கல்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில், 2வது இடம்
பிடித்த இந்தியாவின் சவார்ன் சிங், ‘ரெபேஜஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றார்.
* ஆண்கள் மற்றும் பெண்கள் ‘லைட்வெயிட்’ அணிகளுக்கான ‘ஸ்கல்ஸ்’ பிரிவு
தகுதிச் சுற்றில் பங்கேற்ற இந்திய அணி, ‘ரெபேஜஸ்’ சுற்றுக்குள் நுழைந்தன.
குதிரையேற்றம்: பைனலில் சுருதி, நாடியா
பெண்களுக்கான தனிநபர் குதிரையேற்ற தகுதிச் சுற்றில் பங்கேற்ற
இந்தியாவின் சுருதி வோரா, நாடியா ஹரிதாஸ் முறையே 19, 12வது இடங்களை
பிடித்து, பைனலுக்கு முன்னேறினர்.
இந்தியாவுக்கு அபராதம்
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு குறைவாக உள்ள போட்டிகளை
நீக்க அரசு முடிவெடுத்தது. அட்டவணை தயாரிக்கப்பட்ட நிலையில் விலகினால்
கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதை கண்டுகொள்ளாமல், ‘ரக்பி’ உள்ளிட்ட சில போட்டிகளில் இருந்து
விலகியதால், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஒ.சி.ஏ.,), இந்திய ஒலிம்பிக்
சங்கத்துக்கு (ஐ.ஒ.எ.,) ரூ. 6 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா கூறுகையில்,
‘‘ரக்பி உள்ளிட்ட சில அணிகளை கடைசி நேரத்தில் விலக்கியதால், அபராதம்
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை மறுபரிசீலனை செய்யும் படி,
ஐ.ஒ.ஏ.,யிடம் தெரிவித்துள்ளோம். அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
என நம்புகிறேன்,’’ என்றார்.
Comments