ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார்.
விழாவில் இறுதிவரை அவர் பங்கேற்கவில்லை, சொல்லப்போனால் ஐ படத்தின் ஆடியோவை வெளியிடும் முன்பே பாதியில் வெளியேறினார். இதனால் விழா குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுப்பற்றி பல்வேறு விவாதங்களும் தொடர்ந்தன. விழாவை சரியாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஐ பட ஆடியோ விழாவில் பங்கேற்றது தொடர்பாக, அர்னால்டு தரப்பில் இருந்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒருகடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் பற்றிய விபரம் வருமாறு...

எனது சென்னை பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அதற்கு உங்களது முயற்சிக்கு நன்றி. ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானும் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலேயே ஐ படத்தின் நிகழ்ச்சி தான் மிகச்சிறந்த நிகழ்ச்சி. நான் சென்னை வந்ததில் இருந்து என்னை கவனித்து கொண்ட விதம், தங்கும் இடம், சுவையான உணவுகள் என்று எல்லாமே சிறப்பாக இருந்தது. இவை எல்லாவற்றையும் விட ஐ படத்தின் இசை வெளியீடு சிறப்பாக இருந்தது. நான் ஆஸ்கர் விழாவில் பங்கேற்றுள்ளேன், கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றுள்ளேன், அவர்களை காட்டிலும் நீங்கள் நடத்திய விழா சிறப்பாக இருந்தது. என்னைக்கேட்டால், அவர்கள் அனைவரும் விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. குறிப்பாக பாடி பில்டர்களை மேடையேற்றியது சிறப்பு. அவர்களது நிகழ்ச்சி முடிந்ததும் என்னால் மேடையேறுவதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதுதான் நான் மேடையேற சிறந்த தருணமாக நினைத்தேன். உங்களது சிறப்பான கவனிப்புக்கு என் நன்றிகள். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாய் இருக்கிறது, அந்த நாளை எண்ணி காத்திருக்கிறேன்.

இவ்வாறு அர்னால்டு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி தான் சார், விழாவில் பாதியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே அர்னால்டு சார்...!!

Comments