நாங்கள் கொடுக்கின்ற கட்சி: தொகுதி பங்கீட்டில் சிவசேனா அடம்

மும்பை: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில், நாங்கள் கொடுக்கின்ற கட்சி, வாங்குகின்ற கட்சி அல்ல என சிவசேனா தெரிவித்துள்ளது. இதையடுத்து, பா.ஜ.,வுடனான தொகுதி பங்கீட்டில் அங்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. மகாராஷ்டிராவில், அடுத்த மாதம், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஓர் அணியாகவும், பா.ஜ., - சிவசேனா மற்றொரு அணியாகவும் சந்திக்க உள்ளன. ஆனாலும், பா.ஜ., - சிவசேனா இடையே, தொகுதிப் பங்கீட்டு விஷயத்தில், இழுபறி நீடிக்கிறது. பா.ஜ., கேட்கும், 135 தொகுதிகளை தர முடியாது என, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூரில், பேசிய, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மகாராஷ்டிராவில், 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை, தூக்கியெறிய வேண்டும் எனில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு மிகப் பெரிய கூட்டணி அமைக்கப்பட வேண்டியது அவசியம். அதே நேரத்தில், கூட்டணிக்காக சுயமரியாதையை இழக்க முடியாது. எந்த நிலையிலும், சுயமரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பா.ஜ., இரண்டு அடி முன்னேறி வந்தால், சிவசேனாவும் இரண்டு அடி முன்னேறி வர வேண்டும். விரைவில் கூட்டணி பேச்சை முடித்து, மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கான அடித்தளம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்துள்ள சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுட், மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில், சிவசேனா கட்சி கொடுக்கின்ற கட்சி. வாங்குகின்ற கட்சி அல்ல. நாங்கள் கேட்பவர்கள் அல்ல. கொடுப்பவர்கள். அதனால் பா.ஜ.,வினர் தாங்கள் கேட்பதற்கு முன் என்ன கேட்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால், மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

Comments