சமரசங்களுக்கு இடமின்றி, கொண்ட கொள்கையில் என்றும் உறுதியாக நின்றவர் பெரியார். எளிமையை கடைபிடித்தவர். ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தவர்.
சிக்கனமாக இருந்தவர். தொண்டர்கள் தந்த பணத்தை ஆடம்பரமாக செலவுகள் செய்யாமல் சேமித்து அறக்கட்டளை நிறுவி கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். ஓட்டு கேட்கும் அரசியலை வெறுத்தார். அதனால் தான் அவர் ஓட்டு கேட்கும் அரசியலுக்கு வரவே இல்லை. தனது கட்சி எந்த தேர்லிலும் போட்டியிடாது என்று அறிவித்து, அதை கடைசி வரை கடைபிடித்து வந்தார்.
“நான் சொல்கிறேன் என்பதற்காக, எதையும் ஏற்றுக்கொள்ளாதே, உன் பகுத்தறிவைக் கேட்டுப் பார், சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள், தவறு என்று பட்டால் ஏற்காதே, விட்டுவிடு” என்று பெரியார் சொல்வார்.
பகுத்தறிவை ஊட்டும் பணிக்கு வேறு யாரும்முன்வராததால் நான் செய்கிறேன். இந்த சமுதாயம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சமதர்மசமுதாயமாக மாறி விட்டால் எனக்கு வேலை இல்லை என்றார்.
மதிக்கும் பண்பாளர்:பெரியார் இல்லத்தில் திரு.வி.க. தங்கிய போது, காலையில் பெரியார், திரு.வி.க.-விடம் திருநீறு கொண்டு வந்துகொடுத்தார். திரு.வி.க. வியப்புடன் 'நீங்களே கொண்டு வந்து விட்டீர்களே, நீங்கள் நாத்திகர் ஆயிற்றே' என்றார். அதற்கு பெரியார் சொன்னார், “இன்று நீங்கள் என்னுடைய விருந்தாளி, உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியது என் கடமை” என்றார். மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் மதிப்பவர் பெரியார்.
ஒருமுறை வள்ளலார் இடத்திற்கு பெரியார் சென்றார். உள்ளே சென்ற போது ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றுவிட்டார். உடன் வந்தவர்கள், என்ன நின்றுவிட்டீர்கள்? என்று கேட்டனர்.
'புலால் உண்பவர்கள், இந்த எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம் என்று இருக்கிறது. எனக்கு புலால் உண்ணும் பழக்கம் உண்டு. எனவே இந்த எல்லை தாண்டி வரமாட்டேன்' என்றுசொல்லி நின்று விட்டார். உடன் வந்தவர்கள், இந்த விதிமுறை உங்களுக்குப் பொருந்தாது. உங்களுக்கு விதிவிலக்கு உண்டு. உள்ளே வருக! என்றனர். ஒரு இடத்திற்கு வந்துவிட்டால், அந்த இடத்தில் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவைகளை மதித்து நடக்க வேண்டும் என்றுக்கூறி உள்ளே வர மறுத்து, வந்த வழி திரும்பினார். விதிமுறைகளை மதிக்கும் பண்பாளர் பெரியார்.
ஒரு முறை அவர் மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. கோபம் கொள்ளாமல் இன்னொரு செருப்பும் வரட்டும், இரண்டும் வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். தமிழ்மொழியின் மீது பற்று இருக்கவேண்டும். ஆனால் வெறி இருக்கக் கூடாது என்றார்.
மனதில் பட்டதை துணிவுடன் எடுத்துச்சொல்லும் ஆற்றல்மிக்கவர். யாருக்காகவும் பயந்து, ஒளித்து, மறைத்து என்றும் பேசியதே இல்லை.
பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்திய போது கூட கோயிலில் இருக்கும் எந்த பிள்ளையாரையும் எடுத்து வந்து உடைத்தது இல்லை. தன் சொந்தப் பணம் கொடுத்து பிள்ளையார் சிலை வாங்கி வரச்சொல்லி அதையே உடைத்து போராட்டம் நடத்தியவர்.
நட்புக்கு மரியாதை:பெரியார், ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்தபோதும் இறுதி வரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்த போது மயானம் வரை சென்று கண்கலங்கி அழுதவர் பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்த போது பொறுப்பில்லாமல் இருக்கிறார் என்று, தன் சொத்துக்களை பழநி முருகனுக்கு என்று உயில்எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்ட போது ராஜாஜி சொன்னார்...
''கவலைவேண்டாம், பழநியில் இருப்பது தண்டாயுதபாணி தான். பழநியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோயில்கட்டி, நீங்களே அந்த கோயிலுக்கு தர்மகர்த்தா ஆகி விடுங்கள், சொத்துக்கள் உங்கள் வசமே இருக்கும்'' என்று ஆலோசனை வழங்கினார். அன்று தொடங்கிய அவர்களின் துாய நட்பு இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்தது.
சீர்த்திருத்த சிற்பி:பெண்களுக்காக குரல்கொடுத்தவர் பெரியார். பெண்கள் மாநாட்டில் தான் 'பெரியார்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. 'பிள்ளை பெறும் இயந்திரமா? பெண்கள்'என்று கேட்டவர் பெரியார். பெண்களுக்கு கல்வி, வேலை தர வேண்டும் என்று முழங்கியவர். புலால் உணவு, பிரியாணி போன்றவற்றை இறுதிவரை விரும்பி உண்டு வந்தார். அவருடைய எழுத்து, பேச்சு, இரண்டும் பகுத்தறிவை கற்பிக்கும்விதமாகவே இருந்தது. சமுதாய சீர்திருத்த சிற்பியாகவே விளங்கினார்.
ஆடு, மாடு, பறவை என மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உண்டு. அதனை முறையாகப் பயன்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து, பலர் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க காரணமாக அமைந்தவர் பெரியார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, பதவி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் பெரியார். இட ஒதுக்கீடு கொள்கைக்காக அரசியல் சட்டம் திருத்திட காரணமாக இருந்தவர். தமிழகத்தில் சமூக முன்னேற்றங்கள் நிகழ அவர் காரணம்.
அவர் திரைப்படத்தை விரும்பவில்லை. ஆனால் தொலைநோக்கு சிந்தனையாளர். தமிழர்களைப்பிடித்த நோய் திரைப்படம் என்றார். உண்மை தான். பெரிய திரை, சின்னத்திரை என்று இன்று சமுதாயத்தை சீரழித்து வருகின்றன. இன்று அவர் இருந்திருந்தால், தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்தச் சொல்லி போராடியிருப்பார் என்பது உண்மை.- கவிஞர் இரா. இரவி. 98421 93103 eraeravik@gmail.com
Comments