காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 76,500 மக்களை மீட்ட ராணுவம்

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 76,,500 பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்களில் 76, 500க்கும் மேற்பட்டவர்களை ராணுவத்தினர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 80 ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ விமானப்போக்குவரத்து அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என கூறியுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், 807 டன் நிவாரண பொருட்களை விமானப்படையினர் விநியோகம் செய்துள்ளனர். தண்ணீர் பாட்டீல்கள் மற்றும் உணவுப்பொருட்களை ராணுவத்தினர் விநியோகம் செய்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், இதுவரை 2,10,000 லிட்டர் தண்ணீர், 2.6 டன் பிஸ்கட், 7 டன் குழந்தைகளுக்கான உணவு மற்றும் 31 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.தொலை தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த, 9 சாட்டிலைட் போன்களை மாவட்ட நிர்வாகத்திற்கு ராணுவம் வழங்கியுள்ளது. கார்கிலில் இருந்து ஸ்ரீநகரிலிருந்து பதாமி பாக் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள, 30 ஜெனரேட்டர்கள் வசதியுடன் மொபைல் போன் சார்ஜர்களையும் விநியோகம் செய்துள்ளது. கடைசி ஆள் மீட்கப்படும் வரை மீட்பு பணி தொடரும் என ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதனிடையே,காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவ தளபதி ஆய்வு: வெள்ளம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாத் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,காஷ்மீரில் ராணுவத்தினர் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

சவாலான பணி: ஒமர்: காஷ்மீரில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். மேலும் அவர், அனைத்து மக்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறினார். 

தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒமர் கூறியதாவது: ஸ்ரீநகர், தண்ணீரில் மிதக்கிறது. அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. பல பகுதிகளில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் வசதியும் சீராகி வருகின்றன.மாநிலத்தை மறு சீரமைப்பது மிகவும் சவாலானது. எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கணித்ததை விட வெள்ள நீரின் அளவு பெருக்கெடுத்து ஓடியது. மாநிலத்தில் இலக்கு மாறியுள்ளது எனவும், மக்களுக்கு உணவுப்பொருட்களை சப்ளை செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது என கூறினார்.

Comments