5.2 கிலோ எடையில் பிறந்த அழகிய குழந்தை

சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்த பெண்ணிற்கு, 5.2 கிலோ எடையில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுவே, தமிழகத்தில், அதிக எடையில் பிறந்த குழந்தையாக கருதப்படுகிறது.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்; குடிநீர் கேன்களை, வீடுகளுக்கு வினியோகிக்கும் வேலை செய்து வருகிறார்;
இவரது மனைவி சங்கீதா.'சிசேரியன்' முறையில்...நிறை மாத கர்ப்பிணியான இவர், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள, டபிள்யூ.சி.எப்., - உமன் அண்டு சில்ரன் பவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு, நேற்று அதிகாலை, 12:15 மணிக்கு, 'சிசேரியன்' முறையில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை, 5.2 கிலோ இருந்தது. அதிக எடை கண்டு, டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதுகுறித்து, சிகிச்சை அளித்த டாக்டர் ராஜசேகர் கூறியதாவது:பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடை, 3.5 கிலோ; சங்கீதாவுக்கு பிறந்த குழந்தை, 5.2 கிலோ எடையில் உள்ளது.

இதே மருத்துவமனையில், 2012ல், 5.1 கிலோ எடையில் குழந்தை பிறந்தது. தற்போது, அதை விட எடை கூடுதலான குழந்தை பிறந்துள்ளது. தமிழகத்தில், அதிக எடையுடன் பிறந்த குழந்தை, இதுவாக தான் இருக்கும்.தற்போது உணவு பழக்க மாற்றத்தால், குழந்தைகளின் எடை அதிகரிக்கிறது. இது போன்ற குழந்தைகளை, மூன்று ஆண்டுகளில், சராசரி எடைக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், சர்க்கரை நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

'தாய் பால் கொடுங்கள்; புட்டிப் பால், சத்து பவுடர் ஏதும் கொடுக்க வேண்டாம்' என, பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுவரை பதிவாகவில்லை:விஜயகுமார் - சங்கீதா தம்பதி கூறுகை யில், 'அழகான குழந்தை பெற்றதில் மகிழ்ச்சி. டாக்டர்களின் அறிவுரைப்படி குழந்தையை வளர்ப்போம்' என்றனர்.'தமிழகத்தில், 5.2 கிலோவில் எடையில் குழந்தை பிறப்பு, இதுவரை பதிவாகவில்லை' என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.உலக அளவில், இதற்கு முன், லிபியாவில், 6.2 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது. மரபணு பிரச்னை காரணமாக, ஐக்கிய அரபு நாடுகளில், 10 கிலோ எடையில் குழந்தை பிறந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Comments