வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு
சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை
துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360
கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில்
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில்
அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
Comments