வாரம் ஒருமுறை 5 கி.மீ., நடந்து அலுவலகம் வரும் கலெக்டர்

திருவனந்தபுரம்: கேரளாவின், கோட்டாயம் மாவட்ட கலெக்ட ராக இருக்கும் அஜித்குமார், குறைந்தபட்சம், வாரத்திற்கு ஒருமுறை, வீட்டிலிருந்து தன் அலுவலகத்திற்கு, 5 கி.மீ., நடந்தே செல்கிறார். இதை பின்பற்றுமாறு, பிற அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொள்வதோடு, அவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.


நடந்தே அலுவலகம் வருவதால், உடலுக்கு பயிற்சி கிடைப்பதோடு, உள்ளூர் மக்களின் பிரச்னைகளையும் நேரில் அறிய முடிகிறது என்பதால், இந்த முறையை பின்பற்றுவதாக கூறும் கலெக்டர் அஜித்குமார், தினமும் இவ்வாறு முடியாத என்பதால் தான், வாரத்திற்கு ஒருமுறையாவது பின்பற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டு உள்ளேன். கலெக்டரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள அதிகாரிகளில் பெரும்பாலானோர், இதை பின்பற்றி வருகின்றனர். சிலர், ஆர்வ மிகுதியால், 10, 12 கி.மீ., கூட நடந்தே அலுவலகம் வருகின்றனர். அதிகாரிகள் தன் உத்தரவை பின்பற்றுகின்றனரா என்பதை ஆய்வு செய்யும் கலெக்டர், தான் நடந்து வருவதை பலரும் அறிய செய்கிறார். இதன் மூலம், எரிபொருள் சிக்கனம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளி குறைவதாகவும் கூறுகிறார்.இதை, மாணவர்களும் பின்பற்றி, பள்ளிக்குச் செல்வது நல்லது என கூறும் இவர், ரத்த தானத்தை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களில், இரு முறை ரத்த தானம் செய்துள்ளார்.

Comments