புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து சினோக் மற்றும் அப்பாச்சி ரக போயிங்
ஹெலிகாப்டர்களை 2.5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், முப்படைகளை பலப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் எண்ணத்திற்கு ஏற்ப, ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வெள்ளியன்று நடந்த கூட்டத்தில், கடற்படை கேட்டு வந்த, 16 ஹெலிகாப்டர்களை வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், 991.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 197 இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிடமிருந்து டாங்க் எதிர்ப்பு ரக ஆயுதங்களை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்குவதற்கான முடிவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ராணுவத்திற்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து வரும் சீனாவிற்கு இணையாக, ராணுவத்தை பலப்படுத்த, அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும், இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் 250 பில்லியன் டாலர் வரை செலவு செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் வகையிலும், நவீனப்படுத்தவும், இந்தியாவில் அதிகம்பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை இந்தியாவில்உற்பத்தி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments