கடந்த 2012ம் ஆண்டு, மத்திய தலைமை கணக்காயரின் அறிக்கையில், நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்கள் வழங்கிய வகையில் நாட்டிற்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கோல்கேட் ஊழல்:
ஜார்கண்ட்,
ஒடிசா சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நிலக்கரி
சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் பெரும்பாலானவற்றை உரிய முறையில்
ஒதுக்கீடு செய்யவில்லை என வழக்கு தொடரப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த
விவகாரம் கோல்கேட் ஊழல் என்று அழைக்கப்பட்டது. மின்சக்தியை தயாரிக்கும் பல
நிறுவனங்களின் பெயர்கள் இந்த சுரங்க ஊழலில் அடிபட்டன. சுப்ரீம் கோர்ட்டின்
விசாரணையில், கடந்த 1993ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான, நிலக்கரி
சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டில் வௌிப்படைத் தன்மை கடைப்பிடிக்கவில்லை
என்றும், பல இடங்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன என்றும் தெரிய வந்தது.
காங்., அரசுக்கு அவப்பெயர்:
பல
லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய கோல்கேட் ஊழல் விவகாரம் கடந்த
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, சுத்தமான கரத்திற்கு சொந்தக்காரர் என்ற முன்னாள் பிரதமர்
மன்மோகன்சிங்கின் நேரடிப் பொறுப்பில் சுரங்கத்துறை இருந்ததால், அவருக்கு
பெரும் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் கேள்விகணைகளுக்கு பதில்
அளிக்க முடியாமல் கடந்த காலங்களில் அவர் திணறினார்.
மத்திய அரசு பதில்:
நிலக்கரிச்
சுரங்க ஊழல் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த
உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம்
அறிவித்திருந்தது. இவற்றை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி மத்திய
அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.கடந்த 93, 2011 இடையே
வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமத்தை ரத்து செய்வது
குறித்துசுப்ரீம் கோர்ட்டே முடிவெடுக்கலாம் என்றும் அந்த முடிவை மத்திய
அரசு ஏற்கும் என்றும் மத்திய அரசு பதில் அளித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி:
இதையடுத்து, நிலக்கரி சுரங்க உரிமத்தை ரத்து செய்வது குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், மொத்தம் உள்ள 218 நிலக்கரி சுரங்கங்களில், 214 சுரங்கங்களின் உரிமத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வகையில், 4 சுரங்கங்கள் மட்டுமே தப்பி உள்ளன.
நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் கருத்து : இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நிலக்கரி துறை செயலாளர் பரேக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கொள்கைககள் தவறாக இருந்ததன் காரணத்தினாலேயே, சுரங்கங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அந்த கொள்கைகளை வகுத்தவர்கள் மீது எவ்வித அபராதமோ, தண்டனையையோ விதிக்காதது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.
Comments