தமிழகத்தில், 4,974 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை, மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள், 41 இடங்களில் இயங்கி வருகின்றன.
போராட்டம்:
தனியாரிடம்
மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கட்டுப்பாட்டிலும், இந்த
சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சாலையை முறையாக பராமரித்து,
சுங்கச்சாவடியில், வாகன ஓட்டிகளுக்கு தேவையான கழிப்பறை, தொலைபேசி மையம்,
ஓய்வகம், குடிநீர், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றை செய்து, கட்டணம் வசூலிக்க
வேண்டும் என்பது விதி.ஆனால், இவற்றை முறையாக செயல்படுத்தாமல், கட்டணம்
வசூலிப்பில் மட்டுமே, சுங்கச்சாவடி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதை, கண்டித்து, லாரி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பயணிகள்
என, பலரும் ஆங்காங்கே போராட்டம் நடத்துவது தொடர்கிறது.நீதிமன்றங்களில்,
வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இருப்பினும், சாலையை முறையாக பராமரிக்காமல்,
ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தும், விதியை மட்டும், சுங்கச்சாவடி
நிர்வாகங்கள் முறையாக கடைபிடித்து வருகின்றன. கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல்
மாதங்களில், தமிழகத்தில் உள்ள, 41 சுங்கச் சாவடிகளில், 20 சுங்கச்
சாவடிகளில், கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. மீதமுள்ள, 21 சுங்கச்
சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
வாடகை அதிகரிப்பு:
கட்டண உயர்வு பட்டியலில், பாடியநல்லுார், கொடை ரோடு, வேலன்செட்டியூர், பாளையம், விஜயமங்கலம், புதுார் பாண்டியபுரம், எலியார்பதி, ராசம்பாளையம், ஓமலுார், சமயபுரம், மொரட்டாண்டி, வைகுண்டம், நத்தக்கரை, வீரசோழபுரம், வாழவந்தான்கோட்டை, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, மணவாசி, திருப்பரைத்துறை, திருமந்துறை, செங்குறிச்சி ஆகிய சுங்கச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.இங்கு, 10 முதல், 15 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலாகிறது. சுங்க கட்டணம் உயர்வு காரணமாக, ஆம்னி பஸ்கள் டிக்கெட் கட்டணம் மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Comments