
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்
தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து
அவரது முதல்வர் பதவி இரண்டாவது முறையாக பறிபோய்விட்டது. தமிழகத்தின்
அடுத்த முதல்வராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வமே நியமிக்கப்படுவாரா அல்லது
வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
2001ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா
முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் அப்போது ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது.
இதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஓ. பன்னீர்செல்வத்தை
முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்
2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இடைக்கால முதல்வராக இருந்தார்.
தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்
தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் 2வது
முறையாக அவரது முதல்வர் பதவி பறிபோய்விட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒ.பன்னீர்செல்வமே முதல்வராவாரா? அல்லது வேறு
யாராவது தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள்
அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி.
நத்தம் விஸ்வநாதன், ராஜ்யசபா எம்.பிக்கள் ரபி பெர்னாட், நவநீதகிருஷ்ணன்
ஆகியோரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Comments