உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.14,000 கோடி தே.ஜ., கூட்டணி அரசின் அடுத்த திட்டம்

புதுடில்லி:'ஜன் தன், டிஜிட்டல் இந்தியா' ஆகிய திட்டங்களை தொடர்ந்து, நாடு முழுவதும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 14,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்தியில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு அமைந்த பின், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக, பல புதுமையான திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.



வரவேற்பு:

அரசின் பல்வேறு துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்குவதற்காக, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஏழை மக்கள் வங்கி கணக்கு துவங்கி, பயன்பெறும் விதமாக, 'ஜன் தன்' என்ற திட்டத்தை துவக்கினார். இதற்கு, நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதைத் தொடர்ந்து, நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதில், பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கிராமப் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், இதற்காக, 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கவனம்:

இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும், உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில், பிரதமர் மோடி, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன்படி, அரசின் அனைத்து துறைகளுக்கும், அவர்கள் துறைகள் சார்ந்த கிராமப்புற கட்டமைப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை தரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்கள், இறுதிக் கட்ட பணிகளில் உள்ள திட்டங்கள் ஆகியவை பற்றிய விவரங்களை தெரிவிக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆறு லட்சம்:

நாட்டில் உள்ள, 600 மாவட்டங்கள் மற்றும் ஆறு லட்சம் கிராமங்களை, தரமான சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகள் முழுவதையும், இணையதளம் மூலமான இணைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments