புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியிடம்
சி.பி.ஐ,. ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. சென்னையில் பிரபல வக்கீலான இவர்
பலரை ஏமாற்றிய நிதி நிறுவனம் சாரதா சிட்பண்ட் நிறுவன அதிபரிடம் ரூ. ஒரு
கோடி வாங்கியதாகவும், மேலும் இவரை காப்பாற்ற தான் துணை இருப்பதாகவும்
கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது என்றாலும், இந்த விவகாரம்
குறித்து சி.பி.ஐ.,க்கு கிடைத்த கடிதம் பெரும் சந்தேகத்தை
ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கம் கோல்கட்டாவை மையமாக கொண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாரதா
சிட்பண்ட் நிறுவனம் கொடி கட்டி பறந்தது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட
அப்பாவி மக்களுக்கு முதிர்வு தொகை தராமல் அந்த நிறுவனம் இழுத்து மூடியது.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ., விசாரித்து
வருகிறது. இது தொடர்பாக திரிணாமுல் காங்., பிரமுகர்கள் தொடர்பு
இருப்பதாகவும், சிட்பண்ட் நிறுவன தலைவர் சுதிப்தாசென் கைது
செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மம்தா பானர்ஜிக்கும் தொடர்பு உண்டு என
இடதுசாரி கட்சிகள் நடவடிக்கை கோரி வலியுறுத்தி வருகின்றன. இந்த வழக்கில், மே.வங்க முன்னாள் டி.ஜி.பி., சங்கர் பரூவாவிற்கு தொடர்புள்ளது என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதைத் தொடர்ந்து, நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு, சங்கர் பரூவாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மர்மமான முறையில், சங்கர் பரூவா, தன்னைத்தானே, ரிவால்வாரால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ.,விசாரணை நடத்தியிருக்கிறது. இது தொடர்பான பல்வேறு கேள்விக்கணைகளை தொடுத்துள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
சுதிப்தாசென் சி.பி.ஐ.,க்கு வெளிப்படையாக எழுதி கொடுத்த கடிதத்தில் , அரசியல்வாதிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பலர் என்னை மிரட்டினார்கள். இதில் நளினி சிதம்பரம் கோல்கட்டா 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். இவரை காங்., கட்சியை சேர்ந்த மதங்சிங்கின் மனைவி முன்னிலையில் ரூ. ஒரு கோடிக்கு மேல் கொடுத்தேன் . அப்போது, பிரபல மனோரஞ்சன் நிறுவனத்திடம் ரூ.42 கோடியை முதலீடு செய்ய என்னை நளினி வற்புறுத்தினார். இவ்வாறு கூறியுள்ளார்.
அவசியம் வந்தது ஏன்? : நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் உள்ள மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார். பிரபல வக்கீலான இவர் சாரதா நிறுவனத்திற்கு ஆதரவாக வாதடி பணம் பெற்றிருக்கலாம் என காங்., தரப்பில் கூறப்பட்டாலும், கோல்கட்டாவில், டில்லியில் பெரும் வக்கீல்கள் பலர் இருக்கும் போது சுதிப்தாசென் இவரை அணுக வேண்டிய அவசியம் வந்தது ஏன்? இதில் பெரும் சந்தேகம் உள்ளது என்றும் திரிணாமுல் காங்., தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் இன்னும் திருப்பு முனைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ஐ., விசாரணை நடந்ததா என்பது குறித்து விசாரித்த போது , இந்த தகவலை நளினி நெருங்கிய வட்டாரம் மறுத்தது.
Comments